அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியரசு கட்சி அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான தேர்தலில் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் பிரதனமாக உள்ள குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய இருகட்சிகளிடையேதான் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் அதிபர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளரை உள் கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்து அதன்பிறகு தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் நியூ ஹாம்ப்ஷயர் மாகாண தேர்தலில் அவரது எதிர்த்து போட்டியிடும் பிரதான வேட்பாளரான நிக்கி ஹேலியை நேற்று வெற்றி கொண்டார். இதன் மூலம் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வில் டிரம்ப் மிகவும் முன்னிலை வகிக்கிறார்.
நியூ ஹாம்ப்ஷயர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், நிக்கி ஹேலி, அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்களிடையே பேசுகையில், "இந்த போட்டி இன்னும் முடிவடையவில்லை.
இன்னும் டஜன் கணக்கான மாகாணங்கள் உள்ளன, அடுத்தது எனது மாகாணமான தென் கரோலினா தேர்தல். நான் ஒரு போராளி. இப்போது டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து நிற்பவர்களில் கடைசி நபர் நான் மட்டுமே" என்றார்.
முன்னதாக இம்மாத துவக்கத்தில் டிரம்ப், அயோவா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.