கிர்கிஸ்தான் நாட்டில் 7.1அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதிர வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
சீனாவிற்கு அருகில் உள்ள கிர்கிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 2 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக சீனாவின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலப்பரப்பிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிர்கிஸ்தான், சீனா எல்லையில் உள்ள அக்சு பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும், இதன் அதிர்வுகள் சீனாவையும் தாண்டி கஜகஸ்தான் நாட்டிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக 120 கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாகவும், 47 வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், 6 பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிர்கிஸ்தான் நாட்டில் தற்போது கடும் குளிர் காலம் நிலவி வருவதால், வீடுகளை இழந்த பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக 600-க்கும் மேற்பட்டோர் அடங்கிய மீட்புப்படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட போது பதிவான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் போது, மொத்த பூமியே நகர்வது போன்ற உணர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அடுத்தடுத்து சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருவதால், பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.
ஜப்பானில் கடந்த ஜனவரி 1ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
வசீகரிக்கும் வீடியோ... ஏஐ தொழில்நுட்பத்தில் கண் சிமிட்டி, புன்னகைக்கும் அயோத்தி ராமர்!