‘பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகள்...’ அயோத்தி ராமர் கோயில் விழா தருணத்தில் பாகிஸ்தான் பொருமல்


ராமர் கோயில் குடமுழுக்கு வைபவம்

‘பாபர் மசூதி பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்டது எனவும், இந்தியாவில் பெரும்பான்மைவாதம் கவலைக்குரிய வகையில் வளர்ந்து வருவதாகவும்’ பாகிஸ்தான் விமர்சனம் செய்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்ற நாளில், அதனை முன்வைத்து அண்டை தேசமான பாகிஸ்தான், தனது விமர்சன கருத்துக்களால் இந்தியாவை சாடி உள்ளது. சர்வதேச நாடுகள் திரும்பி பார்க்கும் வகையிலும், உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் கொண்டாடும் வகையிலும் இன்றைய தினம் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு வைபவம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவதன் மத்தியில், பாகிஸ்தானும் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

நூற்றாண்டுக்கும் மேலாக சர்ச்சையில் தொடர்ந்த பாபர் மசூதி - ராமஜென்ம பூமி விவகாரத்தில் 2019-ம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பினை வழங்கியது. அதன்படி பாபர் தளத்தில் இந்து கோயிலின் ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியது. சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டவும் அனுமதி அளித்தது. மேலும் மசூதி கட்டுவதற்கு தனியாக நிலம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து தொடங்கப்பட்ட ராமர் கோயிலுக்கான கட்டுமானங்கள், தற்போது குடமுழுக்கு வைபவத்தை எட்டியுள்ளன.

இதனை சுட்டிக்காடும் பாகிஸ்தான், "இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிராக கடந்த 31 ஆண்டுகால வளர்ச்சிகள், இன்றைய குடமுழுக்கு விழாவிற்கு வழிவகுத்தன. இவையனைத்தும் இந்தியாவில் பெருகிவரும் பெரும்பான்மைவாதத்தை சுட்டிக்காட்டுகிறது. இவையனைத்தும் இந்திய முஸ்லிம்களை சமூக, பொருளாதார மற்றும் அரசியலில் ஓரங்கட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் முக்கிய அம்சமாகும்" என்று கவலை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை சார்பிலான விரிவான அறிக்கையில், ”பாபர் மசூதி பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட வழக்கில், இந்தியாவின் உயர்ந்த நீதித்துறை இழிவான செயலுக்கு காரணமான குற்றவாளிகளை விடுவித்தது. அது மட்டுமன்றி, இடிக்கப்பட்ட மசூதியின் இடத்தில் கோயில் கட்டவும் அனுமதித்தது வருந்தத்தக்கது. பாபர் மசூதி சம்பவம் இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது கறை படிய காரணமானது. அயோத்தி மட்டுமன்றி வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி என அவமதிப்பு மற்றும் அழிவு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் மசூதிகளின் பட்டியல் இந்தியாவில் நீண்டு வருகின்றன.

பாபர் மசூதி

இந்தியாவில் அதிகரித்து வரும் இந்துத்துவ சித்தாந்தம் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அது தொடர்பான ஏனைய சர்வதேச அமைப்புகள், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பாரம்பரிய தளங்களை பயங்கரவாத குழுக்களிடமிருந்து காப்பாற்றுவதிலும், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் மத மற்றும் கலாச்சார உரிமைகளை பாதுகாப்பதிலும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்" என்றும் பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.

x