இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த தனது மகளின் உடலை அவரது செல்போன் மூலம் அமெரிக்க தொழிலதிபர் கண்டுபிடித்து மீட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்தவர் இயால் வால்ட்மேன். இவர் மெலானக்ஸ் என்ற பெயரில் கணினி விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டில் இயால் வால்ட்மேன் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார். அவரது இளைய மகள் டேனிலா (24).
இஸ்ரேலை சேர்ந்த நோம் என்பவரும், டேனிலாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இசைவிழாவில் டேனிலாவும் நோமும் கலந்து கொண்டனர். அப்போது ஹமாஸ் தீவிரவாதிகள் அந்த பகுதிக்குள் நுழைந்து திடீர் தாக்குதலை நடத்தினர். இசை விழா அரங்கிலும் அவர்கள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் அங்கிருந்த 270 பேர் மொத்தமாக உயிரிழந்தனர். டேனிலாவும் நோமும் அங்கிருந்து ஓடி தங்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனர். ஆனாலும் அவர்களை வழிமறித்த ஹமாஸ் தீவிரவாதிகள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
டேனிலாவின் தந்தை இயால் வால்ட்மேன் அப்போது தொழில்ரீதியாக இந்தோனேசியாவில் முகாமிட்டிருந்தார். மகளின் ஆப்பிள் ஐபோனில் இருந்து அவருக்கு அபாய எச்சரிக்கை அழைப்பு வந்தது. உடனடியாக விமானம் மூலம் இஸ்ரேலுக்கு திரும்பிய வால்ட்மேன், மகள் பயன்படுத்திய ஐபோனின் இருப்பிடத்தை கண்டறியும் வசதி மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
மகளைத் தேடிச் சென்ற அவரால் அங்கு மகள் டேனிலா, அவரது காதலர் டோமின் ஆகியோரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளதுதான் பெரும் சோகம்.