ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கியது இந்தியாவைச் சேர்ந்த விமானமா? - மத்திய அரசு விளக்கம்!


ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

ஆப்கானிஸ்தான் நாட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் இந்தியாவை சேர்ந்தது அல்ல எனவும், இது தொடர்பாக கூடுதல் தகவல்களுக்காக காத்திருப்பதாகவும் மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சீனா, தஜகிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் உள்ள படக்‌ஷான் மாகாணத்தில், இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்திற்கு உள்ளானது. இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்த செய்தியில், அந்த விமானம் இந்தியாவிற்கு சொந்தமானது என தகவல் தெரிவித்திருந்தனர்.

விபத்திற்குள்ளான விமானம் இந்திய விமானம் அல்ல என டிஜிசிஏ விளக்கம்

இந்நிலையில் இது தொடர்பாக இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அந்த விமானம் இந்தியாவில் இருந்து கிளம்பிய விமானம் அல்ல எனவும், இந்தியாவை சேர்ந்த தனியார் விமானம் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மொரோக்கோ நாட்டில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாகவும் கூடுதல் தகவல்களுக்காக காத்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஆம்புலன்ஸ் விமானம் விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகம்

இதனிடையே ரஷ்ய விமான போக்குவரத்து அதிகாரிகள், ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்டு 6 பேருடன் பயணித்த விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான் மீது பறக்கும் போது மாயமாகி இருப்பதாகவும், விழுந்து நொறுங்கிய விமானம் அந்த விமானமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அந்த விமானம் இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு பறந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் விமானம் எனவும், 1978ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விமானம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் விமானமும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ள விமானமும் ஒன்றுதானா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் பிற நாட்டு விமான ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து இணைப்பில் இருந்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

x