ஈரானும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பயங்கரவாத இலக்குகள் மீது விமானத் தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து, இரு நாடுகளும் அமைதியை கடைப்பிடிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்கெனவே மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஈரான் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் அந்நாடு தெரிவித்தது.
மேலும், தனது எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை ஈரானில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் விமானம், ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என ஈரானின் அதிகாரபூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானும், அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் மற்றவரின் நிலப்பரப்பில் பயங்கரவாத குழுவை செயல்பட அனுமதித்ததாக குற்றம் சாட்டியுள்ளன. நீண்டகாலமாக இருநாடுகளிடையே நிலவிவந்த இந்த சச்சரவு போர் சூழலுக்கு தள்ளியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், "இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்படுத்திய, ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய ராணுவத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். இரு நாட்டு அரசுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்” என்றார்.
இதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “ஈரான் - பாகிஸ்தான் விவகாரம் இவ்வளவு தூரம் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்பவில்லை. அமெரிக்காவின் நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடு பாகிஸ்தான். அது அப்படியே இருக்கும். ஆனால், இந்த விஷயத்தில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் இன்று தமிழகம் வருகை... ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் நாளை வழிபடுகிறார்!