‘பெரும் தவறாக அமைந்துவிடும்...’ காசாவை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபரின் ஆச்சரிய அறிவுரை!


அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

காசா பிராந்தியத்தை ஆக்கிரமிக்கக் களமிறங்கும் இஸ்ரேலின் முடிவை அமெரிக்க அதிபர் கண்டித்திருப்பது சர்வதேச சமூகத்தின் பார்வையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் அமைப்பினர் அக்.7 அன்று நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது வெறிகொண்டு இஸ்ரேல் பாய்ந்து வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. குடிமக்களின் அடிப்படைத் தேவைக்கான குடிநீர் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் துண்டித்திருப்பது உலகளவில் கண்டனத்தையும் பெற்றுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்த காசா

காசாவை விட்டு பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரித்திருக்கும் இஸ்ரேல், காசாவை ஆக்கிரமிக்கும் நோக்கில் நேற்று களமிறங்கியது. இந்த சூழலில், இஸ்ரேலின் பிரதான நேச தேசமான அமெரிக்கா, ’காசாவை ஆக்கிரமிக்க முயலும் இஸ்ரேலின் நடவடிக்கை பெரும் தவறாக மாறிவிடும்’ என எச்சரித்திருப்பது பல தரப்பிலும் ஆச்சரியம் தந்திருக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதலில் இந்தியா முதல் அமெரிக்கா வரை அனைத்து நாடுகளும் நடுநிலையை கடைபிடிக்க விரும்புகின்றன. இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதல்களை கடுமையாக கண்டித்த இந்த தேசங்கள், காசா வாழ் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தும், போர் விதி மீறல் மற்றும் போர் குற்றங்களாக மாறி வருவதாக சர்வதேச சமூகம் கவலை அடைந்து வருகிறது. அவற்றை பிரதிபலிக்கும் வகையிலேயே அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், காசாவை ஆக்கிரமிக்க முயலும் இஸ்ரேலை கண்டித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

’இஸ்ரேல் போர் விதிகளின்படி செயல்பட வேண்டும் என்றும், அப்பாவி குடிமக்களுக்கான மருந்து, உணவு மற்றும் குடிநீர் ஆகிய மனிதாபிமான தேவைகளை முடக்கக்கூடாது’ என்றும் ஜோ பைடன் அறிவுறுத்தி உள்ளார். அதே போன்று ’காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதற்கு பதிலாக, பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் காசா வரவேண்டும்’ என்றும் தனது விருப்பத்தை பைடன் பதிவு செய்துள்ளார். இவற்றுக்கு மாறாக, ’காசாவை இஸ்ரேல் முழுமையாக ஆக்கிரமிக்க முயல்வது பெரும் தவறாகிப் போய்விடும்’ என்றும் அவர் இஸ்ரேலுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதை வெள்ளை மாளிகை இன்னமும் உறுதி செய்யவில்லை. அந்த பயணத்துக்கு முன்னதாக, இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியிருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் வாழும் 1300க்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 30 அமெரிக்கர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் தம்பதி கைது!

குட் நியூஸ்... ரூ.400க்கு சமையல் சிலிண்டர்; ரூ.5 லட்சம் காப்பீடு; முதல்வர் அறிவிப்பு!

x