பணி நீக்கம் தொடரும்; ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி... கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை!


கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

இந்த ஆண்டும் பணி நீக்க நடவடிக்கை தொடரும் என கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளது, ஐடி ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முன்னணி ஐடி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், எக்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் மட்டும் சுமார் 12,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஆண்டு துவக்கத்தில் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனங்களில் இருந்து சுமார் 1,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக இந்த வேலை நீக்கங்கள் நடைபெற்று வருவதாக பொதுவான கருத்து நிலவி வருகிறது. இருப்பினும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வந்த பொறியாளர்கள் மட்டுமே பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கூகுள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் கூகுள் நிறுவனத்தின் பிற துறைகளில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், வேலை கேட்டு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கொத்துக்கொத்தாக ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது அவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அல்பாபெட் ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆண்டுதோறும் பில்லியன் கணக்கில் லாபம் சம்பாதிக்கும் கூகுள் நிறுவனம் தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்துவது சரியான நடவடிக்கை இல்லை என அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த நிலையில் பணிநீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்த ஆண்டும் பணி நீக்க நடவடிக்கை தொடரும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து பணியாளர்களுக்கும் குறிப்பு ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். அதில், ”இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டு அளவில் இருக்காது. அதேபோல் எல்லா குழுக்களிலும் இருக்காது” என தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 82 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு பணியாற்றி வந்த நிலையில், மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதமான சுமார் 12,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x