அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, சிறையில் இருக்கும் ஈரான் நாட்டு பெண்ணிற்கு அந்நாட்டு அரசு மேலும் கூடுதலாக 15 மாதம் சிறைத் தண்டனையை நீட்டித்துள்ளதற்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈரானை சேர்ந்த 51 வயதாகும் நர்கீஸ் முகமதி என்ற பெண்மணி அந்நாட்டில் உள்ள பெண்களின் உரிமைக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். அவரது செயல்பாடு நாட்டிற்கு எதிராக இருப்பதாக கூறி ஈரான் அரசு, நர்கீஸ் முகமதிக்கு 2016 மே மாதம் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
அதே சமயம் அடக்குமுறையை எதிர்த்து போராடிவரும் இவருக்கு கடந்த 2023 அக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது வரை 12 ஆண்டுகளைச் சிறையில் கழித்துள்ள நர்கீஸ் முகமதிக்கு மீண்டும் 15 மாதங்கள் சிறைத்தண்டனை கொடுத்துள்ளது ஈரான் அரசு. சிறையில் இருக்கும் அவர் மதக்கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக இந்த புதிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை நர்கீஸ் முகமதி ஈரான் அரசினால் 13 முறை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.