அதிர்ச்சி... துருக்கியில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி... 30 பேர் படுகாயம்!


விபத்தில் சிக்கிய பேருந்து

துருக்கியில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.

துருக்கி நாட்டின் முஹ்லா மாகாணம் மர்மரிஸ் மாவட்டத்தில் இருந்து மெர்டின் மாகாணம் நோக்கி பயணிகள் பேருந்து நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 43 பேர் பயணித்தனர். மெர்சின் மாகாணம் யென்கஸ் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி தலைக்குப்பற கவிழ்ந்தது.

சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்து பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையத்தின் (AFAD) பிரதிநிதிகள் மற்றும் தீயணைப்புப் பிரிவுகள் உள்ளிட்ட அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து மெர்சின் ஆளுநர் அலி ஹம்சா பெஹ்லிவன் எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்," இந்த விபத்து நகர மையத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் (சுமார் 100 மைல்) தொலைவில், மெர்சின்-அன்டலியா நெடுஞ்சாலையில், நிகழ்ந்துள்ளது. 40 பயணிகள் மற்றும் மூன்று ஊழியர்களுடன் மெர்சினுக்குச் செல்லும் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

x