ஜப்பானில் அதிர்ச்சி... விமான நிலையத்தில் 280 பயணிகளுடன் மோதிக்கொண்ட 2 விமானங்கள்


ஜப்பானில் 2 விமானங்கள் மோதி விபத்து

ஜப்பானில் விமான நிலையத்தில் 289 பயணிகளுடன் கிளம்ப இருந்த விமானம் ஒன்று மற்றொரு விமானத்தின் மீது மோதிய விபத்தில் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர்.

ஜப்பானில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள தீவுகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் அடிக்கடி விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ விமான நிலையத்தில் கொரியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று 289 பயணிகளுடன் கிளம்புவதற்காக தயார் நிலையில் இருந்தது. அப்போது கேத்தே பசிபிக் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்தது. அந்த விமானத்தில் விமானிகள், பயணிகள் என யாரும் இல்லை.

டார்மார்க் எனப்படும் விமானங்கள் நிறுத்தும் பகுதியில் இருந்து கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் வெளியேறிய போது, கேத்தே விமானத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் கொரியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் ரெக்கை பகுதியில் சேதம் ஏற்பட்டது.

நின்று கொண்டிருந்த போது விபத்து நேர்ந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

உடனடியாக மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பயணிகள் விமானம் ஒன்று, ராணுவ விமானத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானதில் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கடும் பனிமூட்டம் காரணமாக விபத்து நேர்ந்ததாக தகவல்

x