இந்தியா - மாலத்தீவு நாடுகள் இடையிலான மோதலைத் தூண்டியதாக தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்ததோடு, தன்னிலை விளக்கத்தையும் ’ஈஸி மை ட்ரிப்’ தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மாலத்தீவுகளை ஆதரிக்கும் உலக நாடுகளில் முன்னிலை வகிப்பது இந்தியா. வெளிநாட்டுச் சுற்றுலா என்றதுமே இந்தியர்களின் முதல் சுற்று தேர்வில் மாலத்தீவுகளுக்கு முக்கிய இடம் உண்டு. சுற்றுலா மட்டுமன்றி அதன் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்டவற்றிலும் இந்தியாவின் பங்கு அதிகம்.
இதனிடையே அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அங்கே இந்தியாவுக்கு எதிரான மற்றும் சீனாவுக்கு ஆதாரவான முகமது முய்ஸு என்பவர் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அது முதலே மாலத்தீவுக்கும், அதன் பிரதான வருமானமான சுற்றுலாவுக்கும் சிரமதசை ஆரம்பித்தது.
இந்தியாவை புறக்கணிப்பது என்பது மாலத்தீவு புதிய ஆட்சியாளர்களின் பிரதான நோக்கம் என்பதை உணர்ந்துகொண்ட இந்தியா, மாலத்தீவுக்கான மாற்றாக சொந்த மண்ணான லட்சத்தீவுகளை மேம்படுத்த தொடங்கியது. அங்கே அதிரடி பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, லட்சத்தீவு வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்தார்.
இதற்கு பதிலடி என்ற பெயரில் மாலத்தீவின் 3 அமைச்சர்கள் இந்திய பிரதமர் மற்றும் இந்தியர்களுக்கு எதிராக இழிவான விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு மாலத்தீவு நாட்டினரே எதிர்ப்பு தெரிவித்ததில், அந்த பதிவுகள் பொதுவெளியில் இருந்து நீக்கப்பட்டதோடு, தற்காலிக நீக்கத்துக்கும் 3 அமைச்சர்கள் ஆளாயினர்.
இந்தியாவுக்கு எதிரான மாலத்தீவின் பகிரங்க நிலைப்பாடுக்கு இந்தியர்களும் எதிர்வினையாற்றினர். தங்களது மாலத்தீவு பயணங்களை ரத்து செய்தனர். ’ஈஸி மை ட்ரிப்’ என்ற ஆன்லைன் பயண நிறுவனம் மாலத்தீவுக்கான தங்களது ஹோட்டல் மற்றும் விமான முன்பதிவுகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இதற்கு எதிராக அந்த நிறுவனம் விமர்சனத்துக்கும் ஆளானது. இரு நாடுகள் இடையிலான ராஜீய மோதலில், தனியார் நிறுவனம் ஒன்று அரசியல் நோக்கத்தில் செயல்படுவதாக அதன் மீது கண்டனமும் விழுந்தது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நிஷாந்த் பிட்டி, நீண்ட தன்னிலை விளக்கத்தை தந்துள்ளார்.
அதில், மாலத்தீவின் இந்தியா எதிர்ப்பு - சீன ஆதரவு நிலைப்பாடுகளில் தொடங்கி, இந்தியாவுக்கும் அதன் சுற்றுலா பயணிகளுக்கும் எதிரான போக்கை மாலத்தீவே தொடங்கி வைத்தததை விவரித்துள்ளார். மேலும், தங்களது மாலத்தீவு எதிர்ப்பு நிலைப்பாடுக்கு எந்தவொரு அரசியல் அல்லது கட்சி பின்புலம் கிடையாது எனவும் விளக்கியுள்ளார். தங்களது மாலத்தீவு புறக்கணிப்புக்கு வாடிக்கையாளர்களில் 95 சதவீதத்தினர் ஆதரவு தந்திருப்பதாகவும், 5 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, சர்ச்சை காலத்தில் தங்களது செயலி தரவிறக்கம் என்பது 280% அதிகரித்திருப்பதாகவும் நிஷாந்த் பிட்டி தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களமிறங்கிய அமைச்சர்; அதிர்ந்த தொண்டர்கள்