காசாவில் 10,000 குழந்தைகள் பலி - இஸ்ரேல் தாக்குதலின் கோரமுகம்... அதிர்ச்சி தகவல்!


இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மூன்று மாதங்களுக்கு மேலாக தொடரும் போரில் 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போரானது 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதனால் காசாவில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், இந்த போரில் 25, 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் படைகளின் தொடர் தாக்குதலால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக 'சேவ் தி சில்ரன்' என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து நடத்திய வான்வெளி தாக்குதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். காசாவில் வசித்து வரும் 11 லட்சம் குழந்தைகளில் 10,000க்கும் அதிகமான குழந்தைகள் பலியானதால், மொத்த குழந்தை மக்கள் தொகையில் 1% பேர் கொல்லப்பட்டனர். மேலும் இதுவரை காசாவில் 370 பள்ளிகள் மற்றும் 94 மருத்துவமனைகளையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நடந்த தாக்குதலில் 10 ஆயிரம் குழந்தைகள் பலியாகியுள்ளன. இந்த தாக்குதலில் இருந்து தப்பிய குழந்தைகள், உடலில் காயங்களுடன் போதிய மருத்துவ வசதியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து பல்வேறு கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். காசாவில் மட்டும் சுமார் 1,000 குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர் என்றும் இந்த அமைப்பின் அறிக்கை தெரிவிவித்துள்ளது. இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு உலகநாடுகளும் விடுத்த வேண்டுகோளை அந்த நாடு மறுத்துவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...

தேமுதிகவை வளைத்ததா பாஜக? திமுகவைக் கண்டித்து தேமுதிக திடீர் போராட்டம் அறிவிப்பு!

x