அயலக தமிழர்களின் நலனுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ‘தமிழ் வெல்லும்’ எனும் கருப்பொருளை மையமாக கொண்டு ‘அயலகத் தமிழர் விழா’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் ‘அயலகத் தமிழர் விழா’ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடந்து வருகிறது.
இதில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட 58 நாடுகளில் உள்ள தமிழ் வம்சாவளியினர் பங்கேற்றுள்ளனர். முதல் நாள் விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர், 40க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டதோடு, அயலக தமிழர்களின் புத்தகங்களையும் வெளியிட்டார்.
இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘இந்தியாவில் இருக்கக்கூடிய மாநில கட்சிகளில் அயலக தமிழர்களின் நலனுக்கு ஒரு அணியை தொடங்கியது நம்முடைய திமுக கழகம்தான். அயலக தமிழர்கள் நலன் மீது நம்முடைய அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. முன்பைவிட நம்முடைய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் படிக்கவும், வேலை பார்ப்பதற்காகவும் தங்கி இருக்கிறீர்கள்.
எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் பேசுகின்ற மக்களை பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட 135 நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த துறையை திமுக அரசு உருவாக்கியது.
முன்பெல்லாம் வெளிநாட்டில் வேலை என கூறி ஏஜெண்டுகள் ஏமாற்றினார்கள் என்பது போன்ற செய்திகளை பார்ப்போம். ஆனால், அந்த நிலை இன்றைக்கு மாறியிருக்கிறது.
காரணம் அயலக தமிழர்நலத்துறை மேற்கொண்ட பணிகள்தான். ஏன், வெளிநாடுகளில் தமிழர்கள் மிக முக்கிய பதவிகளிலும் உள்ளார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அயலகத் தமிழர் துறை அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காகவும் தி.மு.க. பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது’ என, உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் கதறியழுத நடிகை ராதா!
மொத்தமும் போச்சு... ஓ.பீ.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: அதிமுகவினர் குஷி!