லண்டன் அருகே 1,300 ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்றில் இருந்து எலும்புகளுடன் பழங்கால பொக்கிஷங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு அருகே உள்ளது லிங்கன்ஷயர் என்ற சிறிய நகரம். இதன் அருகே 1,300 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஆங்கலோ-சாக்சன் இனக்குழுவினரின் 50 கல்லறைகள் கடந்த 2020-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, வெஸ்ஸக்ஸ் தொல்லியல் துறையினர் இந்த கல்லறைகளை ஆய்வு செய்யத் திட்டமிட்டனர். இதில் 20 கல்லறைகளைத் தோண்டி எடுத்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்படி கடந்த 8-ம் தேதி தோண்டப்பட்ட கல்லறையில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. அதில் அந்த பெண்ணின் முதுகில், அந்த குழந்தை கட்டப்பட்ட நிலையிலிருந்தது. அதில் இரண்டு தங்க ஆபரணங்கள், வெள்ளி டாலர், செயின், முத்துக்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையும் சேர்த்து இந்த ஆயிவில் இதுவரை சுமார் 250 பண்டைய கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை கண்டறியப்பட்டதிலேயே பெண் மற்றும் குழந்தையின் கல்லறை தான், பெரும் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், அந்த இளம்பெண்ணிற்கும், குழந்தைக்குமான உறவு என்ன என்பதைக் கண்டறிய ஆர்வமுடன் உள்ளதாகவும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கல்லறைகளில் கண்டறியப்பட்ட உடல்களை டிஎன்ஏ, கதிரியக்க சோதனைகளுக்கு உட்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ள தொல்லியல் துறையினர், “அதன் மூலம் அந்த மக்களின் மரபணு மட்டுமல்லாது அவர்கள் எப்படியான உணவு முறையைக் கொண்டிருந்தனர் என்பதையும் அறியமுடியும்” என்றும் சொல்லி இருக்கிறார்கள்.