ஈக்வடார் நாட்டில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் நேரலையின் போது, துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈக்வடார் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக போதை பொருள் கடத்தல் கும்பல்களில் அட்டகாசங்கள் இருந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான அடால்ஃபோ மக்காஸ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அடால்ஃபோ தப்பி ஓடினான். இதையடுத்து அந்நாட்டு அதிபர் டேனியல் நோபோ 60 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
சுமார் 20க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு, ராணுவத்தினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் கலவரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த கலவரத்தில் கடந்த இரண்டு நாளில் மட்டும் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு ஈக்குவடார் நாட்டின் அதிபர் டேனியல் நோபோ அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் குவாயாகில் நகரில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் லைவ் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் திடீரென தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் புகுந்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் தரையில் படுக்குமாறு அச்சுறுத்திய அவர்கள், தங்களிடம் வெடிகுண்டுகள் இருப்பதாக கூறி, அதனை நேரலை கேமராவில் காட்டியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்நாட்டு சிறப்பு அதிரடிப்படை போலீஸார் தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் புகுந்த 13 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ள போலீஸார், அவர்கள் மீது தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு ஒளிப்பதிவாளர் உட்பட இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலை வருவதால் அங்குள்ள நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈக்வடார் நாட்டில் நிலவிவரும் இந்த பிரச்சனை காரணமாக, அண்டை நாடான பெரு-விலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.