குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திமோர் ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ் ஹோர்டாவுடன் இருதரப்பு சந்திப்பு பேச்சுவார்த்தையை இன்று நடத்தினார்.
குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் வளாகத்தில் 10-ம் ஆண்டாக 'துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024’ என்ற உலகாளவிய தொழில் துறை மாநாடு நாளை (ஜனவரி 10) முதல் வரும் 12-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளன.
இந்த மாநாட்டை தொடங்கி வைப்பது மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக குஜராத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு அகமதாபாத் சென்றடைந்தார்.
இந்நிலையில், மாநாடு நடைபெறும் மகாத்மா மந்திர் வளாகத்துக்கு பிரதமர் மோடி இன்று காலை வந்தார். அங்கு, தென் கிழக்கு ஆசிய நாடான திமோர் நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ் ஹோர்டா-வை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பானது, இரு நாடுகளிடையே சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், ஃபின்டெக் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை உள்ளடக்கிய விவாதங்களுக்கு வழிவகுப்பதாக அமைந்தது.
இதேபோல் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசி வருகின்றனர். இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறும் நிகழ்வில் மாநாட்டின் வர்த்தக காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
அதைத் தொடர்ந்து, மாலையில் இந்தியா வரும், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை, பிரதமர் மோடி வரவேற்கிறார். அதன்பிறகு இருவரும் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே சாலையில் 3 கி.மீ. தூரம் ஊர்வலமாக செல்கின்றனர்.
நாளை காலை, 'துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024’ மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலருடன் பிரதமர் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
இந்த தொழில் துறை உச்சி மாநாட்டில் 34 பங்குதாரர் நாடுகள் மற்றும் 16 பங்குதாரர் அமைப்புகள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
விசிக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும்?: திருமாவளவன் பரபரப்பு பேட்டி