பிரான்ஸ் நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை, எலிசபெத் போர்ன் அன்றாட உள்நாட்டு பிரச்சினைகளை தொடர்ந்து கவனித்து வருவார் என்று அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் மிகவும் முக்கியமானது பிரான்ஸ். இங்கு இம்மானுவேல் மக்ரோன் அதிபராக இருந்து வருகிறார். எலிசபெத் போர்ன் பிரதமராக இருந்து வந்தார். பிரான்ஸில் இன்னும் ஒருசில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில், இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவையில் சில மாற்றங்களை அதிபர் செய்யப் போவதாக தகவல் வெளியானபடி இருந்தது.
இந்நிலையில், பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இவர், பிரதமராகி 2 ஆண்டுகள் கூட ஆகவில்லை. இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது முறையாக மீண்டும் பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடந்த மே 2022-ல் எலிசபெத் போர்ன் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
தற்போது பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய பிரதமர் யார் என்பது தொடர்பாக, எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை எலிசபெத் போர்ன் அன்றாட உள்நாட்டு பிரச்சினைகளை தொடர்ந்து கவனித்து வருவார் என, அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.