போர் அறிவிப்பை வெளியிட்டார் இஸ்ரேல் பிரதமர்... உச்சகட்ட பதற்றம்!


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் படையினர் திடீரென தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே மோதல் தொடர்ந்து வருகிறது. இதில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்ட முயற்சிகளுக்குப் பலன் இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்திலேயே இருக்கிறார்கள். கடந்த காலங்களிலும் கூட அப்பகுதியில் பல்வேறு காலகட்டத்தில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதில் இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள். அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே இன்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படைகள் குண்டு வீசி தாக்குதலை ஆரம்பித்தனர். காலை 6.30 மணிக்குத் தொடங்கி சரமாரியாக ஏவுகணை மழையைப் பொழிந்துள்ளனர். அடுத்த 20 நிமிடங்களில் சுமார் 5000 ஏவுகணைகள் வீசி தாக்கியுள்ளன. இதனால் இஸ்ரேல் நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்ததுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அங்கே மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல்

இது ஒரு பக்கம் இருக்க இஸ்ரேலும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கிவிட்டது. அவர்கள் காசா பகுதியை நோக்கிப் போர் விமானங்களைக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராணுவத்துடன் ஆலோசனையும் நடத்தினர்.

இதனிடையே இஸ்ரேல் நாட்டில் போர் ஆரம்பித்துவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேல் மக்களுக்கு நான் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நமது நாட்டு இப்போது போரில் உள்ளது. இது வெறுமன ராணுவ நடவடிக்கை அல்லது எல்லை பதற்றம் இல்லை. இது முழுக்க முழுக்க போர்.. நமது நாட்டில் போர் ஆரம்பித்துவிட்டதையே இது குறிக்கிறது. ஹமாஸ் நிச்சயம் இதற்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கும். இந்தத் தாக்குதலுக்கு அவர்கள் விலையைக் கொடுப்பார்கள். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஹமாஸ் படைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

ஏற்கெனவே, காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் படைகள் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பித்துவிட்ட நிலையில், வரும் நாட்களில் தாக்குதல் மேலும் தீவிரமடையும் என்பதே இதில் இருந்து தெரிகிறது.

x