இலங்கை திரிகோணமலையில் ஒரே நேரத்தில் 1008 பானைகள் வைத்து பொங்கலிட்ட பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையாகவும், நாடு முழுவதும் சங்கராந்தியும் கொண்டாடப்பட உள்ளது. பண்டைய தமிழர்கள் அறுவடைக் காலத்திற்குப் பின்பு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும் கருவிகளையும் காளை மாடுகளையும், பசு மாடுகளையும் அறுவடை செய்த தங்களின் உணவு உற்பத்திகளையும் இவற்றிற்கு அடிப்படையாக இருக்கும் சூரியனையும் போற்றும் விழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை இப்போதே கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அண்டை நாடான இலங்கையிலும் பொங்கல் பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திரிகோணமலையில் சம்பூர் பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒருவார காலம் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவின் ஒரு பகுதியாகக் கடந்த 6-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக நடைபெற்ற இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அதேபோல், படகுப் போட்டியும் நடத்தப்பட்டது. இந்நிலையில், திரிகோணமலையில் உள்ள இந்து கல்லூரியில் பொங்கல் கலாச்சார விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 500 வண்ண கோலமிட்டு, ஒரே சமயத்தில் 1008 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.
தமிழகத்தைப் போலவே மஞ்சள், கரும்பு ஆகியவை கட்டப்பட்டு, விவசாய நிலங்களில் விளைந்த காய்கள், பழங்கள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த விழாவில் 1,500 பள்ளி- கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு பரதநாட்டிய நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினர். இந்த விழாவில் இலங்கை அமைச்சர்கள், மத தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
முரசொலி அலுவலக பஞ்சமி வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பு... உயர் நீதிமன்றம் அறிவிப்பு!
அம்மாவை தெருவில் விட்டுச்சென்ற மகள்... காப்பகத்தில் சேர்த்த பொதுமக்கள்!