மாலத்தீவுக்கு எதிரான மற்றும் லட்சத்தீவுகளுக்கு ஆதரவான பிரச்சாரத்தில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜூரிஜூ மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் படங்களை மாற்றிப் பகிர்ந்ததன் மூலம் சர்ச்சைக்கு ஆளாகி உள்ளனர்.
இந்திய பிரதமர் மற்றும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் பகிர்ந்த விவகாரத்தில், இந்தியர்கள் தங்களது சூடான எதிர்வினையை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்தியர்களால் சுற்றுலா வருமானத்தில் கொழித்துக்கிடக்கும் மாலத்தீவுக்கு மாற்றாக, இந்தியாவின் லட்சத்தீவுகளை ஆதரித்து அவர்கள் களமாடி வருகின்றனர். இவர்களில் பிரபலங்களும் விதிவிலக்கல்ல. ஆனால் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகளுக்கு இடையிலான வேறுபாட்டை உணராததில், இவர்களின் பதிவுகள் நெட்டிசன்களால் கிண்டலுக்கு ஆளாகியுள்ளன.
மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டவர் வரிசையில் இந்தியர்களே முதன்மை வகிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாகவே ரஷ்யர்கள் மற்றும் சீனர்கள் வருகின்றனர். ஆனால் இந்தியாவுக்கு எதிரான மாலத்தீவின் நிலைப்பாட்டால் மாலத்தீவை புறக்கணிக்குமாறு வலியுறுத்தும் இந்தியர்கள், அதற்கு மாற்றாக அண்மையில் பிரதமர் மோடி விஜயம் மேற்கொண்ட லட்சத்தீவுகளின் புகழ் பாடி வருகின்றனர். ஆனால் லட்சத்தீவுகளின் புகைப்படங்கள் கைவசம் கிட்டாததில் , மாலத்தீவு படங்களை பகிர்ந்து மாலத்தீவு எதிர்ப்பு முழக்கங்களை பதிவிட்டு வருகின்றனர்.
சல்மான் கான் , கங்கனா ரனாவத், அக்ஷய் குமார் , அமிதாப் பச்சன், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள், லட்சத்தீவுகளுக்கு ஆதரவளிக்குமாறு இந்தியர்களை கோரி வருகின்றனர். இந்த வரிசையில் இணைந்த ரன்வீர் சிங், தனது பதிவில் லட்சத்தீவுகள் என்ற பெயரில் 2016-ல் எடுக்கப்பட்ட மாலத்தீவின் பிரபல படத்தை இணைத்திருந்தார். அவரது அந்த எக்ஸ்பதிவு கேலிக்கு ஆளானதும், உடனடியாக அதனை நீக்கிவிட்டு படம் இல்லாத பதிவினை வெளியிட்டு ரன்வீர் சிங் சமாளித்துள்ளார்.
மத்திய அமைச்சரான கிரண் ரிஜூரிஜூ, லட்சத்தீவுக்கு ஆதரவு சேர்க்கும் தனது பதிவில் லட்சத்தீவுக்கு பதில் மாலத்தீவு மற்றும் பிரெஞ்சு பொலினீசியாவில் அமைந்திருக்கும் போரா போரா தீவு ஆகியவற்றின் படங்களை பகிர்ந்திருந்தார். நலம்விரும்பிகள் சுட்டிக்காட்டியதும் அந்த பதிவை அமைச்சர் கிரண் ரிஜூ ரிஜூ அடியோடு நீக்கிவிட்டார்.
”இவர்களுக்கு என்ன ஆச்சு?” என்று படங்களை தவறாகப் பதிந்த பாலிவுட் பிரபலம் மற்றும் மத்திய அமைச்சரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ’நமது தேசத்தின் நிலப்பரப்பையும் பெருமைக்குரிய இடங்களையும் உள்வாங்காது பொதுவெளியில் தவறான படங்களை பதிவிடும் பிரபலங்களால் சர்வதேச விவகாரத்தில் இந்தியர்களுக்கு தலைகுனிவு நேராதா?’ என்று அந்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.