உலகில் நீண்டகாலமாக பதவி வகிக்கும் பெண் - வங்கதேசத்தில் 5ம் முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா!


ஷேக் ஹசீனா

வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 2009 முதல் தோல்வியே கண்டிராத ஷேக் ஹசீனா 5வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

வங்க தேசத்தில் நேற்று அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மொத்தமுள்ள 300 இடங்களில் 222 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான ஜடியா கட்சி 11 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. சுயேட்சைகள் 62 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மொத்தம் பதிவான வாக்குகளில் 75 சதவீத வாக்குகளை அவாமி லீக் கட்சி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான வெற்றியை அவாமி லீக் பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனா எட்டாவது முறையாக கோபால்கஞ்ச்-3 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 1986ல் இருந்து இத்தொகுதியில் போட்டியிட்டு வரும் அவர், இம்முறை 2,49,965 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட போட்டியாளர்களில் முக்கியமானவரான பங்களாதேஷ் சுப்ரீம் கட்சியைச் சேர்ந்த எம் நிஜாம் உதின் லஷ்கர் வெறும் 469 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் பிரதமராக ஐந்தாவது முறையாக பதவி ஏற்க இருக்கிறார். அதேபோல் தொடர்ச்சியாக நான்காவது முறையாக பதவி ஏற்கவுள்ளார்.. இது ஒட்டுமொத்தமாக அவரது கட்சிக்கு 5வது வெற்றியாகும்.

வங்கதேச பொதுத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) புறக்கணித்துள்ளது. ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து தேர்தலை புறக்கணிப்பதாக பிஎன்பி கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியா அறிவித்தார். தேர்தலுக்கு முன்பாக நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்தன. பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா

எதிர்கட்சிகள் பெரும்பாலானவை தேர்தலை புறக்கணித்ததால் ஷேக் ஹசீனா எளிதில் வெற்றிபெற்றுள்ளார். ஷேக் ஹசீனா வங்கதேசத்தின் நிறுவன தந்தையும் முதல் ஜனாதிபதியுமான பங்கபந்து ஷேக் முகம்மது முஜிபுர் ரகுமாமானின் மகள் ஆவார். வங்கதேசத்தில் நீண்ட காலம் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருப்பவர் என்ற பெருமையையும் இவருக்கே உள்ளது. 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை அவர் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 2009ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வங்கதேச பிரதமராக பதவி வகித்து வருகிறார். உலக அளவில் நீண்ட காலம் மக்களால் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பில் இருக்கும் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கே உள்ளது.

ஷேக் ஹசீனா இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவை பேணி வருகிறார். "இந்தியா எங்களின் நம்பகமான நட்பு நாடு. எங்களின் விடுதலைப் போரின் போது எங்களுக்கு ஆதரவளித்தது. 1975-க்கு பின்னர் நாங்கள் எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்தோம். அவர்கள் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இந்திய மக்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.

x