பிரதமர் குறித்து சர்ச்சை கருத்து: மாலத்தீவு அரசு தூதரிடம் இந்தியா கவலை


மாலத்தீவு அரசு தூதர் இப்ராஹிம் சாஹீப்

பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் ஆட்சேபணைக்குரிய கருத்துகளை கூறியதை தொடர்ந்து மாலத்தீவு அரசு தூதரிடம் இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தனது சமீபத்திய லட்சத்தீவுப் பயண புகைப்படங்களையும் வீடியோக்களையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் கடலில் அவர் நீந்திய புகைப்படம், வீடியோக்கள் வைரலாகின. மேலும், சாகச பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்கள் லட்சத்தீவு செல்லலாம் என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

பிரதமரின் லட்சத்தீவு பயணத்துக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் ஏராளமானோர், மிகச்சிறிய யூனியன் பிரதேசமான இந்தியாவின் லட்சத்தீவு, மாலத்தீவுக்கு மாற்றான சிறந்த சுற்றுலாத் தலமாக பரிந்துரைக்க தொடங்கினர்.

இதற்கிடையே பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணத்தை தொடர்புபடுத்தி, மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியுனா, மால்ஷா ஷரீப், மஹ்சூம் மஜித் ஆகியோர் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இதையடுத்து அந்நாட்டில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், அந்நாட்டு அரசு, இது சம்மந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட கருத்து; அரசின் கருத்து அல்ல என்று தெரிவித்ததோடு, அவதூறு கருத்துகளை வெளியிட்ட 3 அமைச்சர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது.

லட்சத்தீவில் பிரதமர் மோடி.

இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக ஊடகங்களில் மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறு கருத்துகளை வெளியிட்டதால், பல இந்தியர்கள், மாலத்தீவில் திட்டமிட்டிருந்த தங்களது விடுமுறைக்கான சுற்றுலா பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால் மாலத்தீவுக்கு சுற்றுலா வருவாய் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள மாலத்தீவு அரசின் தூதர் இப்ராஹிம் சாஹீப்பிற்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. அதன்பேரில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம், பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறான கருத்துகள் வெளியிடப்பட்டது குறித்து இந்தியா சார்பில் அதிருப்தியும், கவலையும் தெரிவிக்கப்பட்டது.

x