வங்கதேச வன்முறையில் 3 நாட்களில் 232 பேர் உயிரிழப்பு


டாக்கா: வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து இந்தியாவுக்கு தப்பி வந்தார்.

ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு, வங்கதேசத்தில் வன்முறை நிகழ்வுகள் தீவிரமடைந்தன. இந்நிலையில், கடந்த திங்கள் முதல் புதன்கிழமை வரையிலான மூன்றுநாட்களில் மட்டும் அங்கு 232 பேர் கொல்லப்பட்டிருப்பதாக வங்கதேச செய்தி நிறுவனம் புரோதாம் அலோ தெரிவித்துள்ளது.

அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தொடங்கிய கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரையில் போராட்டத்தில் மொத்தமாக 560 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஜுலை16 முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையில் 328பேரும், ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 7 வரையிலான 3 நாட்களில் மட்டும் 232 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வங்கதேச உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

படைவீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினால், அது தங்களுக்கான வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என்று நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வங்கதேச கல்லூரி மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் போராட்டத்தில் குதித்தனர்.

அருணாச்சல பிரதேச அனைத்து மாணவர் சங்கம், அம்மாநில உள்துறை அமைச்சர் மமா நதுங்கிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எல்லையை கண்காணிக்க வேண்டும்: வங்கதேசத்தில் நிலவும் கொந்தளிப்பு காரணமாக ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. இவர்கள் அருணாச்சல பிரதேசத்தில் நுழைந்தால், அது இங்குள்ள பழங்குடியினரின் சூழலியல் மற்றும் மக்கள்தொகை சமநிலையை பாதிக்கும் என்பதால் அதுகுறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். எனவே சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எல்லை நெடுகிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இது தொடர்பாக அரசு உடனடியான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக நடவடிக்கை நிறுத்தம்: இது தொடர்பாக மேகாலயா அரசு அதிகாரிகள் கூறும்போது, “வங்கதேச எல்லையில் வர்த்தக சாவடிகளை திறந்துவைத்தால் அந்நாட்டு மக்கள், தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுவினர் மற்றும் கடத்தல்காரர்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக உளவுத்தகவல் கிடைத்துள்ளது. எனவே இரு வர்த்தக சாவடிகளை தற்காலிமாக மூடியுள்ளோம். வங்கதேசத்தில் நிலைமை சீராகும் வரை இந்த நடவடிக்கை தொடரும்” என்றனர்.

x