90 வயது மூதாட்டிக்கு ஆயுசு கெட்டி: நிலநடுக்கத்தில் சிக்கி 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு!


நிலநடுக்கம் ஏற்பட்ட ஜப்பான்.

ஜப்பானில் நிலநடுக்கத்தில் சிக்கிய 90 மூதாட்டி 5 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மீட்பு நடவடிக்கை

ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் ஜனவரி 1-ம் தேதி மாலை 4 மணிக்குப் பிறகு 7.6 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். இதற்கிடையில், இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

சாலை மட்டத்திற்கு வீட்டின் கூரைகள் தகர்ந்த நிலையில் மழையுடன் சேர்ந்து பெய்கிற பனிப்பொழிவு மீட்பு பணிகளைப் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. விமானங்கள் மற்றும் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன. காணாமல் போன 200-க்கும் மேற்பட்டவர்களின் நிலை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மீட்புப் பணியாளர்கள் இஷிவாகா மாகாணம் சுஸு நகரில் இரண்டு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது மூதாட்டியை உயிருடன் மீட்டனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கிடையே உணவின்றி ஐந்து நாட்களுக்கும் மேலாக அந்த மூதாட்டி உயிருடன் இருந்தது மீட்புபடையினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இடிபாடுகளுக்கு இடையே கொட்டும் பனியில் சிக்கியவர்கள் 72 மணி நேரத்திற்குப் பிறகு உயிர் பிழைக்கமாட்டார்கள் என்ற நிலையில், 124 மணி நேரத்திற்குப் பிறகு 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நிலநடுக்கத்தின்போது கொதிக்கிற நீர் மேலே பட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுவரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x