இரண்டாம் நாளாக மீண்டும் முழங்கிய பீரங்கிகள்... தென்கொரியாவை தொடர்ந்து சீண்டும் வடகொரியா


முழங்கும் வடகொரியா பீரங்கிகள்

தென்கொரியாவிற்கு சொந்தமான யோன்பியாங் தீவுக்கு அருகே வடகொரியா நேற்று மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலின் தொடர்ச்சியாக இன்றும் புதிய தாக்குதலை மேற்கொண்டது. இதனை தென்கொரிய ராணுவம் உறுதி செய்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை அவ்வபோது எழுப்பி வரும் வடகொரியா, இரண்டாவது நாளாக மீண்டும் தென்கொரியாவை சீண்டியுள்ளது. வழக்கமாக தென்கொரியா - அமெரிக்கா கூட்டு போர்ப்பயிற்சிகளை கண்டிக்கும் விதமாக தன்னிச்சையாக தென்கொரிய எல்லையில் வடகொரியா தாக்குதல் நடத்துவதுண்டு. தன்னிச்சையான போர்ப்பயிற்சி என்ற பெயரில் தென்கொரியர்களை பீதியில் ஆழ்த்தும் வகையில் வடகொரியா பீரங்கிகளை முழங்க விடுவதுண்டு.

கொரிய பீரங்கிகள்

இந்த வரிசையில் நேற்று தென்கொரியாவின் யோன்பியாங் தீவு பகுதியை நோக்கி, வடகொரியா திடீர் தாக்குதலை நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் முழங்கியதில் தீவில் வசிக்கும் மக்களை இடம்பெயருமாறு தென்கொரியா உத்தரவிட்டது. பதிலடியாக தென்கொரியாவும் பயிற்சி என்ற போர்வையில் 400 ரவுண்டுகள் சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன.

பின்னர் அதற்கு பதிலடியாக வடகொரியா அத்துமீறித் தாக்க வாய்ப்பாகும் என்ற கணிப்பில், மேற்கு கடல் எல்லைக்கு அருகிலுள்ள ஐந்து பெரிய தீவுகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தென்கொரியா உத்தரவிட்டது.

தொடரும் தவணையில் சனிக்கிழமை பிற்பகலிலும் மேற்கு கடல் எல்லைக்கு அருகே வடகொரியாவின் பீரங்கிகள் 60 முறை தாக்கியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. ’தென்கொரியர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கு பீரங்கி பயிற்சிகளை மேற்கொள்வதை வடகொரியா நிறுத்த வேண்டும், இதன் மூலம் கொரிய தீபகற்பத்தில் புதிய பதற்றத்தை உருவாவதை தவிர்க்க வேண்டும்’ என தனது பங்காளி தேசத்துக்கு தென்கொரியா அறிவுறுத்தியதோடு பதிலடியை நிறுத்திக் கொண்டது.

வடகொரியாவின் பீரங்கி

முன்னதாக 1999, 2002 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இரு கொரியாக்களுக்கும் இடையேயான மோதல்களுக்கு, மேற்குக் கடல் எல்லையே மோசமான தொடக்கமாக அமைந்தது. தற்போதைய வடகொரியாவின் அத்துமீறலும் அதே போன்று விபரீதத்துக்கு வழி செய்யலாம் என்றும் பிராந்திய நாடுகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன. ஆனால் வடகொரியாவின் காதுகளில் எதுவும் ஏறியதாக தெரியவில்லை.

ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ் என உலகின் இருவேறு மூலைகளில் ஏற்கனவே போர்கள் மும்முரமாவதன் மத்தியில், அணு ஆயுதங்களை குவித்து வைத்திருக்கும் வடகொரியாவின் ஒவ்வொரு நகர்வையும் உலக நாடுகள் கூர்ந்து கவனித்துவருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

சபரிமலையில் தமிழக பக்தர்கள் மீது கொடூர தாக்குதல்... கேரள போலீஸ் அடாவடி

அதிர்ச்சி... விமான விபத்தில் பிரபல நடிகர், 2 மகள்கள் உயிரிழப்பு

x