இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் நிமிடத்திற்கு நிமிடம் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக காஸா மாறிவிட்டதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த 3 மாதத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காஸாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் தற்போது மீண்டும் காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
அதே சமயம் இந்தப் போருக்கு சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்த போதிலும் இஸ்ரேல் எதையும் கண்டுகொள்ளாமல் காஸா மீது குண்டு மழையை பொழிந்து வருகிறது. இதனால் காஸாவில் நிமிடத்திற்கு நிமிடம் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இதுவரை 22,438 பேர் பலியாகி இருப்பதாகவும் மேலும் 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் குழுத் தலைவர் மார்டின் க்ரிஃபித்ஸ் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘போர் தொடங்கி 3 மாதங்கள் ஆகிவிட்டன. மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக காஸா மாறிவிட்டது. மனிதாபிமான உதவிகளை செய்ய செல்வோருக்கு 20 லட்சம் மக்களுக்கு உதவுவது என்பது சவாலாக உள்ளது.
இந்த போர் தொடங்கியிருக்கவே கூடாது. இதனை முடிக்கும் காலம் நெருங்கிவிட்டது. உடனே போரை நிறுத்த வேண்டும். இந்த 90 நாட்களுமே நரக நாட்கள்தான். நடந்தவை எல்லாமே மனிதாபிமானத்தின் மீதான தாக்குதல்கள் மட்டுமே’ என கூறி உள்ளார்.