போர் முடிந்தாலும் காசா எங்கள் கட்டுப்பாட்டிலேயே தொடரவேண்டும் - இஸ்ரேல் அமைச்சர் பரபரப்பு!


யோவாவ் கலான்ட்

ஹமாஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகும், காசா பிராந்தியத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டை இஸ்ரேல் தொடர வேண்டும். காசாவின் நிா்வாகத்தை, இஸ்ரேலின் மேற்பார்வையில் அமைக்கப்படும் பாலஸ்தீன ஆட்சிமைப்பு கவனித்துக்கொள்ள வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் பரிந்துரைத்துள்ளாா்.

கடந்த சில நாட்களாகவே காசாவில் இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 22,600-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா்.மேலும், முழுமையான வெற்றிபெறாமல் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். இந்த நிலையில்தான் போருக்குப் பிந்தைய நிலவரம் தொடா்பாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலையும் காசா

அவர், “காசாவில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கான போா் இறுதிவரை தொடரும். அதற்கு எவ்வளவு காலம் தேவைப்படுமோ அவ்வளவு காலம் போரிடுவோம். காசா பகுதியை ராணுவ ரீதியில் ஆட்சி செலுத்தும் ஹமாஸின் திறனை அகற்றுவதே எங்கள் குறிக்கோள்.

ஹமாஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகும், காசா பிராந்தியத்தின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டை இஸ்ரேல் தொடர வேண்டும். பாதுகாப்பு தவிா்த்த அந்தப் பிராந்தியத்தின் பிற நிா்வாக நடவடிக்கைகளை, இஸ்ரேலின் மேற்பார்வையில் அமைக்கப்படும் பாலஸ்தீன ஆட்சிமைப்பு கவனித்துக்கொள்ள வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதியைப் புனரமைப்பதற்கான பொறுப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிராந்திய கூட்டாளி நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றாா்

காலன்ட்டின் இந்தத் திட்டம் அமைச்சரவையில் ஏற்கப்பட்டு, அதனை இஸ்ரேல் அரசு நிறைவேற்ற முற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், இது அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிரானது ஆகும். போா் முடிவுக்குப் பிறகு காசாவின் ராணுவக் கட்டுப்பாட்டை இஸ்ரேல் நீண்ட காலம் வைத்திருக்கக் கூடாது; அவ்வாறு செய்தால் அது இஸ்ரேலின் மிகப் பெரிய தவறாக இருக்கும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பலமுறை எச்சரித்துள்ளார்.

உருக்குலையும் காசா

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போா் தொடங்கியதற்குப் பிறகு 4-ஆவது முறையாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் இஸ்ரேல் வருகிறார். உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தத்தை தீவிரமாக வலியுறுத்தும் இந்த நேரத்தில், இஸ்ரேலின் தற்போதைய போா் உத்திகள் குறித்தும், போரின் முடிவுக்குப் பிந்தைய காசாவின் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக அவா் இஸ்ரேல் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சரின் இத்தகைய கருத்து உலகளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

x