வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 105 ஆக உயர்வு


வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெறும் போராட்டம் வன்முறையாக மாறியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. இந்த வன்முறை காரணமாக இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தாயகம் திரும்பி வருகின்றனர்.

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் முறைகேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், இது தொடர்பாக டாக்கா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அப்போது இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அப்போது உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.

இதனையடுத்து டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதேசமயம் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவினர் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே வன்முறை ஏற்பட்டது. காவல் துறையும் பாதுகாப்புப் படையினரும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தை கட்டுப்படுத்த வங்காளதேசத்தின் பல பகுதிகளில் செல்போன், இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் விரக்தியடைந்த மாணவர்கள் டாக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கட்டிடங்களைச் சேதப்படுத்தியதாலும், ஆயுதம் தாங்கிய போலீஸாருடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டதாலும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில், டாக்காவில் நேற்று காலை இணையதள சேவை தொடங்கப்பட்டாலும், அவற்றின் வேகம் குறைவதால் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவை இயங்கவில்லை.

இந்த வன்முறை சம்பவங்களால், வங்களாதேசத்தில் படித்து வந்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் உத்தரப்பிரதேசம், ஹரியாணா, மேகாலயா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர் வங்கதேசத்தில் எம்பிபிஎஸ் படித்து வந்தனர். வங்களாதேசத்தில் நடந்து வரும் வன்முறையால் பெரும்பாலான மாணவர்கள் அகூர் எல்லை வழியாக இந்தியா திரும்பினர். பல நாட்கள் காத்திருந்து இறுதியில் வங்கதேசத்தை விட்டு வெளியேற முடிவு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

x