பட்லர்: அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த அந்நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவருக்கு காது பகுதியில் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச்சூட்டினை அடுத்து ட்ரம்ப் உடனடியாக மேடையில் இருந்து பாதுகாவலர்கள் புடை சூழ வெளியேறினார். அமெரிக்க உளவுத்துறை இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ளது. ட்ரம்ப் உள்ளூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சென்றார். துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு ஆளான ட்ரம்ப் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சப்தம் கேட்டு அங்கு குழுமியிருந்த மக்கள் கீழே குனிந்தனர். மேடையில் பேசிக் கொண்டு இருந்த ட்ரம்பும் குனிந்தார்.
என்றாலும் இந்தத் தாக்குதலில் ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது. காதில் ரத்தம் சொட்டிய நிலையில் தனது கையை உயர்த்தி காட்டினார். தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை மேடையில் இருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். இதில் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி கண்டனம்: பிரச்சாரத்தின் போது அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது நண்பர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்டிருக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடம் இல்லை. ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், காயம்பட்டவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் எங்களின் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.