[X] Close

வெனிசுலா சிறையில் கலவரம்; 29 பேர் பலி: கட்டுக்கடங்காத சிறைக்கைதிகளை அடைத்து வைத்தது காரணமா?


29

  • kamadenu
  • Posted: 25 May, 2019 15:51 pm
  • அ+ அ-

-ஏபி

வெனிசுலாவின் ஒரு சிறையில் நேற்று காவலர்களுக்கும் ஆயுதமேந்திய கைதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 23 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் உள்ள குறைவான சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத சிறைக்கைதிகள் அடைத்து வைக்கப்படுவதும் சிறைக் கொலைகளுக்குக் காரணம் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து வெனிசுலா  பிரிசனர்ஸ் அப்சர்வேட்டரி எனப்படும் சிறைக்கைதிகள் உரிமைகளுக்கான கண்காணிப்பக தன்னார்வல அமைப்பின் இயக்குநர் ஹம்பர்டோ ப்ராடோ தெரிவிக்கையில், ''நேற்று மாலை முதலில் கைதிகளுக்கிடையேதான் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் பலரும் ஆயுதம் ஏந்தியவர்கள். இதைத் தடுக்க முயன்ற அதிகாரிகள் சிறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எதாவது கொள்ளையில் ஈடுபடப் போகிறார்களா என்ற பயமும் ஏற்பட்டது.

இதனைத் தடுத்து நிறுத்த காவலர்கள் அவர்களுடன் மோதினர். இதனால் 18 காவலர்கள் காயமடைந்தனர். இம்மோதலின்போது ஒரு குண்டுவெடிப்பும் நிகழ்ந்தது.

வெனிசுலாவில் கடந்த 2017லிருந்து நடந்த மூன்று வெவ்வேறு கலவரங்களில் இதுவரை 130க்கும் அதிகமான சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

வெனிசுலாவில் நடந்துவரும் இத்தகைய சிறைக் கலவரங்களை உயரதிகாரிகள் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாம் இத்தகைய ஒரு சூழ்நிலையை இன்று பெற்றுள்ளதற்கு இந்த சிறைச்சாலைகளை சிறைகளாக கருதாமல் கிடங்குகளைப் போல மாற்றி, அதிக எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைப்பவர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதனைத் தடுத்து நிறுத்த உடனடியாக ஏதாவது செய்யாவிட்டால் இந்த உயிரிழப்புகள் மேலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

வெனிசுலாவின் மத்திய மாகாணமான போர்ச்சுகீசியாவில் இச்சிறை வளாகம் அமைந்துள்ளது. நாட்டின் தலைநகர் காரகாஸிலிருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள இந்தச் சிறை வளாகத்தில் தற்போது 540 சிறைக்கைதிகள் உள்ளனர். ஆனால் இதில் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் வகையில் இச்சிறை வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்று ஹம்பர்டோ ப்ராடோ தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து வெனிசுலாவின் அரசுத்துறை உயரதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

வெனிசுலா சிறைக் கைதிகளுக்கான இன்னொரு மனித உரிமைக்குழு இச்சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த ஆண்டு வலென்சியா நகரில் ஒரு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் 68 கைதிகள் உயிரிழந்தனர். அவர்களில் பலர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமேஸானோஸ் மாகாணத்தில் சிறை வளாகத்திற்குள் வெடித்த கலவரத்தில் 39 பேர் பலியாகினர்.

30 சிறைச் சாலைகளில் 57 ஆயிரம் கைதிகள்

வெனிசுலாவில் தற்போது மிகப்பெரிய வரலாற்று அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அங்கு உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மில்லியன் கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில்தான் வெனிசுலா நாடெங்கும் சிறைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அடங்காமல் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு மொத்தமே உள்ள 30 சிறை வளாகங்களிலும் 57 ஆயிரம் சிறைக்கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் போதை மருந்துகள் ஆபத்தான ஆயுத நடமாட்டமும் இங்கு சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ளன. அரசாங்கம் உடனடியாக இதற்குத் தீர்வு காண வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close