ஆற்றில் நீச்சலடித்த சிறுமியை உயிருடன் விழுங்கிய முதலை!


ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் நீராடச் சென்ற 12 வயது சிறுமியை முதலை ஒன்று உயிருடன் விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் 12 வயது சிறுமி நீராடச் சென்றார். அப்போது நீச்சல் அடித்து மகிழ்ந்து கொண்டிருந்த அந்த சிறுமியை முதலை ஒன்று உயிருடன் விழுங்கியுள்ளது. இது குறித்து போலீஸாருக்கு உடனடியாக சிறுமியின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்குள் 14 அடி நீளமுள்ள பெரிய முதலையை மக்கள் சுட்டுக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமியின் மரணம் 2018-ம் ஆண்டுக்குப் பிறகு வடக்கு ஆஸ்திரேலியாவில் நடந்த அபாயகரமான முதலை தாக்குதல் என்று கூறப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஆற்றில் பாசி சேகரித்துக் கொண்டிருந்த உள்ளூர் பெண் ஒருவர், முதலையால் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் வடபிரதேசத்தில் முதலைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற விவாதத்தை கிளப்பியது. வடக்கு ஆஸ்திரேலியா புறநகரில் உள்ள பழங்குடி சமூகமான பலம்பாவுக்கு அருகில் உள்ள மாங்கோ க்ரீக்கில் கடந்த வாரம், முதலையால் சிறுமி தாக்கப்பட்டார். இதனால் முதலையைப் பிடிக்க அல்லது சுட்டுக்கொல்ல ரேஞ்சர்கள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. உப்பு நீர் முதலைகள் பல பழங்குடி ஆஸ்திரேலியர்களால் வழிபாட்டுச் சின்னமாக கருதப்படுகிறது. இந்த முதலையே 12 வயது சிறுமியைக் கொன்றது என்று போலீஸார் தெரிவித்தனர்.