நடுகாட்டில் அதிர்ந்த மாணவர்கள்: 5 அடி நீளத்தில் வினோத உயிரினம்!


அமெரிக்காவில் வனப்பகுதியில் நள்ளிரவில் 5 அடி நீளம் கொண்ட வினோத உயிரினத்தைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

உலகில் அறிவியலுக்கு எட்டாத சில மர்மங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றை நம்புவது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், கண்ணால் பார்த்தாலும் நம்பாமல் இருப்பது முட்டாள்தனமாகும். இத்தகைய மர்மங்களில் யுஎஃப்ஒக்கள், ஏலியன்கள், பேய்கள் கூட அடங்கும். சிலர் பேய்கள் மற்றும் வேற்று கிரகவாசிகள் இருப்பதை உறுதியாக நம்புகிறார்கள், மற்றவர்கள் அவை வெறும் மாயை என்று கடுமையாக மறுக்கிறார்கள். சமீபத்தில் அப்படியொரு ஆச்சரியமான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் உள்ள ஒரு காட்டில் பள்ளி மாணவர்கள் சிலர் முகாமிட்டனர். இவர்கள் அனைவரும் உயர்நிலைப் பள்ளி முடித்தவர்கள். தெற்கு லூசியானாவில் உள்ள ஹௌமாவிலிருந்து பயணம் செய்த இந்த பள்ளி மாணவர்கள், கிசாச்சி தேசிய வனப்பகுதியில் முகாமிட்டிருந்தனர். அந்தப் பகுதியில் பெரிய கால்தடங்களைக் கண்டார்கள். சிறிது நேரம் கழித்து, அவர்கள் தூரத்தில் ஒளிரும் கண்களும் பயங்கரமான குரலும் கொண்ட ஒரு விசித்திரமான உயிரினத்தைக் கண்டனர்.

இதனால் பீதியடைந்த மாணவர்கள் உடனடியாக 911 என்ற எண்ணுக்கு போன் செய்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த இரண்டு போலீஸார், மாணவர்களைப் பத்திரமாக மீட்டனர். அப்போது அவர்கள், பளபளக்கும் கண்கள் மற்றும் 5 அடி நீளம் கொண்ட பெரிய விலங்கைப் போன்ற வடிவத்தைக் கண்டதாக போலீஸாரிடம் தெரிவித்தனர். அதன்பிறகு, போலீஸார் காடு முழுவதும் சோதனையிட்டனர், ஆனால் பெரிய கால் தடங்களையோ, சந்தேகத்திற்கிடமான விலங்கின் சத்தத்தையோ அவர்களால் பார்க்கவோ, கேட்கவோ முடியவில்லை. இச்சம்பவம் ஜூன் 28 அன்று இரவு 9.20 மணியளவில் நடந்தது.

நியூயார்க் போஸ்ட் படி, கிசாச்சி தேசிய வனப்பகுதியில் இவ்வளவு பெரிய கால்தடங்கள் இருப்பதாக சொல்லப்படுவது முதல் முறையல்ல. கடந்த 2019-ம் ஆண்டு ஒரு தம்பதி இதே போன்ற பெரிய கால் தடங்களையும், பயங்கர குரலுடன் கூடிய விசித்திர உயிரினத்தைப் பார்த்ததாக காவல் துறையிடம் தெரிவித்தனர். கால்தடங்களைப் பார்த்ததாகவும், விலங்கு சத்தமாக அலறுவது போன்ற ஆடியோ பதிவும் இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், அதன் பிறகு இந்த விஷயத்தில் யாரும் அதிக கவனம் செலுத்தவில்லை. தற்போது அதே போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதால் காவல் அதிகாரிகள் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர்.