[X] Close

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதப் பின்னணி: மாணவியின் சேர்க்கையை ரத்து செய்த பாக். பல்கலைக்கழகம்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 15:46 pm
  • அ+ அ-

-பிடிஐ

பாகிஸ்தானில் உள்ள சிந்து பல்கலைக்கழகம் தன்னிடம் பயிலும் மாணவிக்கு ஐஎஸ்ஐஎஸ் பின்னணி இருப்பது தெரியவந்ததையொட்டி அவரது சேர்க்கையை ரத்து செய்துள்ளது. எனினும் இம்மாணவி நீதிமன்றம் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதப் பயிற்சி பெற்ற பெண் நாரீன் லெகாரி. இவர் லாகூரில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவதற்கான தோல்வியடைந்த சதித் திட்டத்தில் இவரும் ஒரு அங்கமாகச் செயல்பட்டவர்.

லெகாரி, சிந்து மாகாணத்தில் உள்ள  ஜாம்ஷராவோ லியாவாக் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்.தனது சொந்த ஊரான ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான ஹுசைனாபாத்தில் கடந்த 2017-ல் பிப்ரவரி மாதத்தில் இருந்து காணாமல் போனார். இவருடன் இணைந்து இயங்கி வந்த அலி, பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டார்.

பின்னர் நாரீன் லெகாரி கைது செய்யப்பட்ட பிறகு லியாவாக் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் சேர்க்கையை ரத்து செய்தது. பின்னர் இவர் 2018-ல் மீண்டும் முயன்று சிந்து பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் இளங்கலைப் பட்டத்துக்கான சேர்க்கை பெற்றார். அதன் பின்னர் இவரது பின்னணி பற்றிய தகவல்கள் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்த பிறகு அவரது சேர்க்கை ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவரது தந்தை டாக்டர் அப்துல் ஜபார் லெகாரி டாக்டர் எம்.ஏ. காசி வேதியியல் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

பல்கலைக்கழகம் சேர்க்கையை ரத்து செய்துள்ள நிலையில் மாணவி நாரீனும் அவரது தந்தையும் சிந்து உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சிந்து பல்கலைக்கழகத்தை எதிர்த்து ஒரு கூட்டு அரசியலமைப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அரசியலமைப்பின் கே 25-ன் படி, பல்கலைக்கழக நிர்வாகம் அப்பெண்ணின் உரிமைகளை மறுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

துணைவேந்தர் ஃபதே புர்ஃபாத் கூறுகையில், ''பல்கலைக்கழக நிர்வாகம் சார்ந்த சில ஆவணங்களை சட்ட அமலாக்க அதிகாரிகள் நுழைந்து சரிபார்த்தனர். அதன்பிறகு தான் நாரின் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்'' என்றார்.

பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் நாதீர் அலி முகேரி கூறுகையில், ''சிந்து மாகாணத்தில் விண்ணப்பிக்கும்போது அவரது முந்தைய சேர்க்கைகள் ரத்தானது குறித்த உண்மைகளை மறைத்துவிட்டார். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர் சேர்க்கையின்போது மாணவியின் முந்தைய சேர்க்கை ரத்து குறித்த உண்மைகள் பற்றித் தெரியவந்தது'' என்றார்.

கைது செய்த நேரத்தில் நாரீன் பயங்கரவாத நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டு வந்தது குறித்து ஒப்புக்கொண்டார்.

தோல்வியில் முடிந்த நாரீனின் மனித வெடிகுண்டு தாக்குதல்

மேலும், ஒப்புதல் வாக்குமூலத்தில், மாணவி நாரீன் தான்  ஒரு ஈஸ்டர் பண்டிகையின்போது சர்ச் ஒன்றில் தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபடுவதற்கான மனித வெடிகுண்டாகப் பயன்படுத்தப்பட்டதாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது  தெரிவித்ததை பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் திட்டத்தைச் செயல்படுதத இரண்டு தற்கொலை ஜாக்கெட்டுகள், நான்கு குண்டுகள் மற்றும் சில தோட்டாக்கள் கொடுக்கப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் தெரிவித்தார். எனினும் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். நாரீன் உள்ளிட்ட இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close