விளாடிமிர் புதின் - பிரதமர் மோடி சந்திப்பு: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடும் விமர்சனம்


புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தது குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியா - ரஷ்யா இடையேயான 22வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மேலும், பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.

இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி, மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 29 மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இச்சூழலில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தது குறித்து உக்ரைன் அதிபர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் மோடி சந்தித்த நாளில், உக்ரைனில் உள்ள குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனை மீது, ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 3 குழந்தைகள் உள்பட சுமார் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் மோடி சந்தித்தது தொடர்பாக ஜெலென்ஸ்கி கூறுகையில், “ரஷ்யா வேண்டுமென்றே மருத்துவமனையை குறிவைத்து தாக்கியுள்ளது. உலகின் ரத்தக்களரி குற்றவாளி புதின். அவரை பிரதமர் மோடி சந்திப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஜனநாயக நாட்டின் தலைவர் மிகப்பெரிய குற்றவாளியை மாஸ்கோவில் கட்டியணைத்துள்ளார். அமைதியை நிலை நாட்டுவதற்கான முயற்சி தோல்வியடைந்ததைப் போன்று ஏமாற்றம் தருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கீவில் குழந்தைகள் மருத்துவமனை மீதான தாக்குதல் சம்பவத்தை ரஷ்ய ராணுவம் மறுத்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய ராணுவம் தரப்பில், ‘கீவில் குழந்தைகள் மருத்துவமனை, உக்ரேனிய வான் பாதுகாப்பு ஏவுகணையால் தாக்குதலுக்குள்ளானது. ரஷ்யாவின் தாக்குதல்கள், உக்ரைனின் ராணுவ மற்றும் மூலோபாய தளங்களை மையமாகக் கொண்டவை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.