ஆந்திரா மாணவர் அமெரிக்காவில் பலி: அருவியில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்


கிழக்கு கோதாவரி: அமெரிக்காவில் மருத்துவம் படித்து வந்த ஆந்திரா மாணவர் அருவியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கோபாலபுரம் மண்டலத்தைச் சேர்ந்த சித்யாஸ் பகுதியைச் சேர்ந்தவர் காடே ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி ஷிரிஷா. இந்த தம்பதியருக்கு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். இவருடைய மகள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், ஸ்ரீனிவாஸின் மகன் சாய்சூர்யா அவினாஷ்(26) மருத்துவ மேல்படிப்புக்காக கடந்த 2023-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். அங்குள்ள அவரது சகோதரி வீட்டில் தங்கி மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவினாஷ் தனது சகோதரியின் குடும்பத்தினருடன் தனது தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

அங்கிருந்து இரு குடும்பத்தினரும் அருகில் உள்ள அருவிகளைப் பார்க்கச் சென்றனர். அங்கு சாய்சூர்யா அவினாஷ் ஒரு அருவியில் நின்று கொண்டிருந்த போது திடீரென தவறி நீரில் விழுந்தார், இதனால் அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அருவியில் இருந்து கீழே விழுந்த சாய்சூர்யா அவினாஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து அவினாஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமெரிக்காவில் இருந்து அவினாஷின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வர அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். மருத்துவப் படிப்பு படிப்பதற்காக சென்ற ஆந்திரா மாணவர் அமெரிக்காவில் அருவியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம், சித்யாஸ் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.