ரிஷி சுனக் ராஜினாமா உரை: ட்ரோல் செய்யப்பட்ட அக்ஷதா மூர்த்தியின் ஆடை


புதுடெல்லி: பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா உரை நிகழ்த்திய போது, அவரது மனைவி அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் 'ட்ரோல்' ஆகி உள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் கீயெர் ஸ்டார்மர் புதிய பிரதமராக தேர்வாகியுள்ளார். இந்நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, பிரதமர் ரிஷி சுனக், தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.

டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே பிரதமர் ரிஷி சுனக், உரையாற்றியபோது, அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி அருகிலிருந்து கவனித்தார். இந்நிலையில் பிரிட்டன் தேர்தல் முடிவு மற்றும் அந்நாட்டின் எதிர்காலம் குறித்த விவாதம் தீவிரமடைந்தபோது, ரிஷி சுனக் ராஜினாமா உரையை நிகழ்த்தியபோது அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஆடை அந்நாட்டினர் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்தனர்.

அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஆடை நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்தது. சிலர் ஆடையின் நிறத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்தனர். மற்றவர்கள் ஆடையின் வடிவத்தைப் பற்றி தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டனர். சிலர் ஆடையின் விலை குறித்து கருத்து தெரிவித்தனர்.

ஒரு சமூக வலைதளப் பயனர், “அக்ஷதா மூர்த்தியின் ஆடை ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறது. நீங்கள் நீண்ட நேரம் கண்களை உற்றுப் பார்த்தால் கலிபோர்னியாவுக்கு ஒரு விமானம் புறப்படுவதைக் காணலாம்” என குறிப்பிட்டுள்ளார். "அக்ஷதா மூர்த்தியின் ஆடை டிஸ்னிலேண்ட் 'ஃபாஸ்ட் பாஸ்'-யைப் பெறும் ஒரு கியூ ஆர் குறியீடாகும்" என மற்றொரு நபர் தெரிவித்துள்ளார். 395 பவுண்டுகள் விலையுடைய இந்த ஆடை இந்திய மதிப்பில் ரூ.42 ஆயிரமாகும். ஆனால், அக்ஷதா மூர்த்தியின் உடையை குறிப்பிட்டு ட்ரோல் செய்யப்படுவது அதன் விலைக்காக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.