இந்திய வெளியுறவுக் கொள்கைகளில் எந்த நாடும் கட்டளையிடும் சூழல் இல்லை என்றும் இந்தியர்கள் சுயமரியாதை உடையவர்கள் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென புகழாரம் சூட்டினார்.
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த 3-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தாமல், துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார். இதையடுத்து இம்ரான்கான் பரிந்துரையால் நாடாளுமன்றத்தை அதிபர் ஆரிப் ஆல்வி கலைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்த அந்நாட்டு அதிபரின் உத்தரவு செல்லாது என்றும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை இம்ரான் கான் அரசு சந்திக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
முன்னதாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான், தான் நீதித்துறையை மதிக்கும் அதேநேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிப்பதாகவும் எதிர்கட்சிகள் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் எந்த நாடும் கட்டளையிடுவதில்லை என்றும் இந்தியர்கள் சுயமரியாதை உடையவர்கள் என்றும் புகழாரம் சூட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், "எந்த வல்லரசு நாடுகளாலும் இந்தியாவுக்கு ஆணையிட முடியாத நிலை உள்ளது. ஆனால் ஆட்சிக்கட்டிலில் இருந்து தன்னை அகற்ற அமெரிக்கா துடிக்கிறது. சர்வதேச சதிகளால் பாகிஸ்தானின் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும்" என்று இம்ரான் கான் அழைப்பு விடுத்தார்.