[X] Close

இந்தியாவில் 6 அணு மின் நிலையங்களை அமைக்கிறது அமெரிக்கா


america

  • kamadenu
  • Posted: 15 Mar, 2019 07:13 am
  • அ+ அ-

அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் 6 அணு மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

கடந்த 2008 அக்டோபரில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் உதவியுடன் இந்தியாவில் 6 அணு மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் சர்வதேச பாதுகாப்புக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்ட்ரியா தாம்சனை, வாஷிங்டனில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவில் அணு மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக இருவரும் 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "பாதுகாப்பு, அணு சக்தி துறையில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்படுத்தப்படும். அமெரிக்க தரப்பில் இந்தியாவில் 6 அணு மின் நிலையங்கள் கட்டப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அணு மூலப்பொருட்கள் விநியோக குழுவில் இந்தியாவை இணைக்க ஆதரவு அளிப்போம் என்றும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இதற்கு சீனா முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

இந்தியாவில் எந்தெந்த இடங்களில் அணு மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்பது குறித்து கூட்டறிக்கையில் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close