ஜமால் கொலை; உண்மையை நிச்சயம் கண்டறிவோம்: சவுதி

ஜமால் கொலை வழக்கில் உண்மையை நிச்சயம் கண்டறிவோம் என்று சவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் ஜூபிர் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, ''ஜமால் கொலையை சவுதி அதிகாரிகள்தான் செய்துள்ளனர்.இதன் காரணமாக 11 பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜமாலின் உடல் பாகங்கள் எங்கு இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக துருக்கியைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
ஜமாலின் உடல் குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இறுதியில் நாங்கள் உண்மையை கண்டறிவோம்'' என்று கூறினார்.
முன்னதாக, சவுதி பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், ''சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும், துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க சவுதி அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜமால் கஷோகி கொல்லப்படுவதற்கு முன்னரே சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.