[X] Close

மலேசியாவின் 16-வது மன்னராக முடிசூடினார் சுல்தான் அப்துல்லா


sultan-abdulla-crowns-as-malaysia-s-king

  • க.சே.ரமணி பிரபா தேவி
  • Posted: 31 Jan, 2019 13:38 pm
  • அ+ அ-

மலேசியாவின் புதிய மற்றும் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா முடிசூட்டப் பட்டுள்ளார்.  ஐந்தாம் சுல்தான் முஹமது பதவி விலகி சுமார் 1 மாதம் கழித்து இன்று (வியாழக்கிழமை) பெஹாங் மாநிலத்தைச் சேர்ந்த  சுல்தான் அப்துல்லா மன்னராகி உள்ளார்.

 

இந்த நிகழ்வு பிரதமர் மஹாதிர் முகமது மற்றும் கேபினெட் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் முன்னிலையில் நடந்தது. அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அதிகாரபூர்வ மன்னராக  சுல்தான் அகமது உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வு நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

 

மலேசிய மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த ஜனவரி 6-ம் தேதி பதவி விலகினார். ரஷ்ய அழகியை அவர் திருமணம் செய்துகொண்டதால்தான் ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து அரண்மனை கருத்து தெரிவிக்கவில்லை.

 

ஆண்டாண்டு காலமாக இஸ்லாமிய மன்னர்களால் ஆளப்படும் மலேசியாவில், 9 மாநிலங்களில் அரச பரம்பரையினர் ஆட்சி செய்கின்றனர். இந்த மாநிலங்களில் உள்ள மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர். அவர் மன்னராக முடிசூட்டப்படுவார்.

 

அந்த வகையில், பஹாங் மாநிலத்தின் தலைவரான 59 வயது சுல்தான் அப்துல்லா, புதிய மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சுல்தான் அப்துல்லா, ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். உலகக் கால்பந்து அமைப்பான ஃபிஃபாவிலும் சுல்தான் உறுப்பினராக உள்ளார்.மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் சுல்தான் பொறுப்பு வகித்துள்ளார்.

 

மலேசிய மன்னர் மற்றும் அவரின் குடும்பத்தின் செலவுகளுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.8.6 கோடியை ஒதுக்க அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. கேபினெட் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இத்தொகை இன்னும் உயர்த்தப்படும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close