[X] Close

என்ன இது ட்ரம்ப்.. சிறுபிள்ளைத்தனமா இருக்கு..?


trump-issue

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 11:27 am
  • அ+ அ-

இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும்அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் பிரச்சினையில் சிக்கியுள்ளன. தெளிவில்லாத அமெரிக்க வெளியுறவுக் கொள்கையால் ஏற்பட்ட பிரச்சினை அல்ல இது.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் நாடுகளுக்கு மத்தியில், ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மைக்கு மற்ற நாடுகள் செய்யும் உதவியை துச்சமாக நினைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பேச்சால் ஏற்பட்ட பிரச்சினை இது. ஆப்கனில் ராணுவ உதவியை செய்யாமல், அங்கு நூலகம் கட்டிக் கொடுக்கிறார் இந்திய பிரதமர் மோடி என, லேட்டஸ்ட்டாக உளறியிருக்கிறார் ட்ரம்ப். இதை இந்தியா, ஆப்கன் இரு நாடுகளுமே கண்டித்துள்ளன.

ஆப்கனில் இந்தியா, நாடாளுமன்ற கட்டிடத்தை உருவாக்கி வருகிறது என்பதை முதலில் ட்ரம்ப் தெரிந்திருக்க வேண்டும். மோடியும் நூலகம் பற்றி அடிக்கடி பேசியதாகத் தெரியவில்லை. அப்படி இருக்கும்போது, நூலகம் கட்டி வருவதாக ட்ரம்ப் எப்படி சொன்னார் எனத் தெரியவில்லை. வெளியுறவுக் கொள்கையையும் பல்வேறு நாடுகளுக்கு அளித்த உறுதிமொழியையும், லாப நஷ்டக் கணக்கோடு பார்க்கிறார் ட்ரம்ப் என்பதுதான் இப்போதைய பிரச்சினை. ஆப்கனில் காலம் காலமாக அமெரிக்கா செய்து வரும் பணிகளை ஒப்பிடும்போது, இந்தியாவின் உதவி, வெறும் 5 மணி நேரப் பணிதான் எனக் கூறியிருக்கிறார். உண்மையில் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா செய்து வரும் உதவியால், ஆப்கனில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் கவனிக்கத் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

இந்தப் பிரச்சினைக்குப் பிறகு மோடியும் ட்ரம்பும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஆப்கன் உள்பட பல விஷயங்கள் குறித்து பல முறை போனில் தொடர்பு கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது கடைசி வரை வெளியே வரப்போவதில்லை என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு தகவல்கள் வெளிவரக் கூடும். ஆனால் எப்படியும் உலக நாடுகள் குறித்தும், ஆப்கன் குறித்தும் ட்ரம்ப் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ அதில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

தெற்கு ஆசிய நாடுகளிலேயே மிகவும் அதிக அளவாக 300 கோடி டாலர் அளவுக்கு இந்தியா, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆப்கனில் செயல்படுத்தி வருவதாக இரு நாடுகளுமே தெரிவித்துள்ளன. ராணுவ பயிற்சி அளித்தல், தரமான சாலைகள் அமைத்தல், இலகுரக ஹெலிகாப்டர்கள், ராணுவ கவச வாகனங்கள் அளித்தல் மற்றும் 30 கோடி டாலர் செலவில் நீர் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அணை கட்டுதல் போன்ற பல்வேறு உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இதுபோக, நூற்றுக்கணக்கான ஆப்கன் மாணவர்கள் இந்தியாவில் உயர் கல்வி பெறும் வகையில் கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்கன் நோயாளிகள் உயர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனை வசதிகளையும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற மைதான வசதிகளையும் செய்து வருகிறது. இவையெல்லாம் இந்தியா செய்து வரும் வளர்ச்சிக்கான உதவிகள் என்பதை உலக நாடுகள் அறியும். ஆனால் ராணுவ வீரர்கள் மூலம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டால்தான் அது உதவி என ட்ரம்ப் நினைப்பது சுத்த மோசம்.

ஒரு வகையில் பார்த்தால், இந்தியா ஆப்கனில் உண்மையிலேயே ஒரு நூலகத்தைக் கட்டி அதில் புத்தகங்களை அடுக்கி வைத்து, படிக்க வருமாறு ட்ரம்புக்கு அழைப்பு விடுத்தால் நன்றாகத்தான் இருக்கும். அவரும் அங்குள்ள நூல்களைப் படித்தால், 1979 வரை ஆப்கனில் தீவிரவாத பிரச்சினை இல்லை என்பதையும், அதன் பிறகு அங்கு கோலோச்சிய தீவிரவாதிகள் சோவியத் நாடுகளுக்குள் புகுந்ததால்தான் ரஷ்யா ஆப்கன் மீது படையெடுத்து ஆக்கிரமித்தது என்பதையும் தெரிந்து கொள்வார். ஈரானில் ஷா ஆட்சி கவிழ்ந்த சூழலில், ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் தீவிரவாதப் பிரச்சினையை கட்டுப்படுத்தவே ரஷ்யா ஆப்கனில் நுழைந்தது. இதெல்லாம் அதிபர் ட்ரம்புக்கு தெரியாது என்பதோடு, இதையெல்லாம் அவருக்கு சொல்ல வேண்டிய விவரம் தெரிந்தவர்கள் எல்லாரும் வெளியேறி விட்டார்கள். அதிபர் சொல்லுக்கு தலையாட்டுபவர்கள் மட்டும்தான் அவரது நிர்வாகத்தில் இருக்கிறார்கள்.

ட்ரம்ப் உளறலை பொருட்படுத்தாமல், ராணுவம் அல்லாத தனது உதவிகளை இந்தியா தொடர்ந்து செய்ய வேண்டும். ஆப்கன் நலன்கள் பாதுகாக்கப்படும் வகையில் அமைதி நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும். ட்ரம்ப் மற்றும் அவரைப் போன்றோர் அவ்வப்போது இதுபோல பேசத்தான் செய்வார்கள். அதில் கவனம் செலுத்தி இந்தியா திசை மாறிவிடக் கூடாது. அமெரிக்காவின் புதிய கொள்கைகளால், மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்ற பயம் அமெரிக்காவுக்கும் இருக்கத்தான் செய்கிறது.

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்,

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close