[X] Close

விமான நிலையத்திலேயே 7 மாதங்கள் கழித்த சிரிய அகதிக்கு விடிவுகாலம் பிறந்தது!- கனடா அரவணைத்தது


syrian-refugee-stranded-7-months-in-malaysia-airport-lands-in-canada

படம்: ஏ.பி.

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Nov, 2018 15:15 pm
  • அ+ அ-

மலேசியாவின் குலாலம்பூர் விமான நிலையத்தில் நாடற்றவராக வீடற்றவராக 7 மாதங்கள் தவித்த சிரிய நாட்டு அகதி ஹசன் அல் கொண்டாருக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. ஆம். அவரை கனடா நாடு அடைக்கலம் தந்து அரவணைத்துள்ளது. அகதியாகத்தான். ஆனால் இதுவரை எந்த நாடும் உதவாத நிலையில் கனடாவின் உதவிக்கரம் பாராட்டுதற்குரியது.

பின்னணி:
ஹசன் அல் கொண்டார், கடந்த 2011-ம் ஆண்டு சிரிய போரில் இருந்து தப்பித்து ஐக்கிய அரபு எமீரகத்துக்குச் சென்றார். அங்கு பணியும் கிடைத்தது. ஆனால், அவரது ஒர்க் விசா முடிந்தது. அதனால் அவரை அவரது சொந்த ஊருக்கு நாடுகடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு ஹசன் ஒப்புக்கொள்ளவில்லை. சிரியா சென்றால் தன்னை கைது செய்து கொன்றுவிடுவார்கள் என்று மன்றாடினார். சிரியாவில் ராணுவ சேவையில் ஈடுபடுவது கட்டாயம். ஆனால், ஹசனோ அந்த கட்டாயத்திலிருந்து தப்பியே யுஏஇ ஓடினார். இதன் காரணமாகவே அவர் சிரியா செல்ல அஞ்சி வந்தார்.

அவரது மன்றாட்டுக்கு செவி சாய்த்த யுஏஇ அரசு குறைந்தபட்ச சலுகையாக அவரை மலேசியாவுக்கு நாடு கடத்தியது. மலேசிய அரசு சிரிய அகதிகளுக்கு விசா வழங்கிக் கொண்டிருந்ததால் அப்படிச் செய்தது. ஆனால், அங்கும் மூன்று மாதங்கள்தான் தங்க முடியும். மூன்று மாதங்கள் முடிந்த பிறகு கம்போடியா சென்றார். ஆனால், கம்போடியா அரசு ஹசனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அங்கிருந்து ஈகுவேடார் செல்ல கையிலிருந்த அத்தனை பணத்தையும் செலவழித்தார். உலகிலேயே சிரிய நாட்டவர்களுக்கு விசா வழங்கும் மூன்றே நாடுகளில் ஈகுவேடாரும் ஒன்று. ஆனால், அந்த விமானம் அவரை ஏற்றிக்கொள்ளவில்லை. இதனால் தற்போது மலேசியாவிலேயே அவர் முடங்கினார்.

ஒரே நம்பிக்கையாக இருப்பது கனடா அரசு என்று சொல்லியிருந்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் முஸ்லிம் கூட்டமைப்பு ஹசனுக்கு உதவ முன்வந்தது. இது குறித்து அந்த கூட்டமைப்பைச் சேர்ந்த ஷவுகத் ஹசன், "மலேசிய விமான நிலையத்தில் யாரும் உதவ தயாராக இல்லாத சூழலில் ஹசன் இருக்கிறார் என்பதை தெரிந்தவுடன் நாங்கள் அவருக்கு உதவ முன்வந்தோம். அதற்கான விசா மற்ற ஆவணங்கள் சார்ந்த வேலையை முடிக்க இரண்டு மாதங்கள் ஆனது. அவரை பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது விருந்தினராக ஏற்றுக் கொண்டுள்ளார்" என்றார்.

திங்கள் கிழமை இரவு கனடாவின் வான்கூவர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார் ஹசன். அவரது தனிப்பட்ட தாளாளர் லாரி கூப்பர் ஹசனை பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

கொண்டார், ஒரு வீட்டின் கூரையின் கீழ் உறங்கப்போவது ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாக அந்தப் பெண் கூறினார். 

அதுதான் சுதந்திரத்தின் ஓசையும் வாசனையும்..

"வான்கூர் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தவுடன் சுற்றுப்புற காற்றை ஆழமாக சுவாசித்தேன்.என்னைப் போன்றவனுக்கு மீண்டும் தெருவில் நடப்பதும், சுத்தமான காற்றை சுவாசிப்பதும் அதை முகர்ந்து உணர்வதும் சாதாரணமானது அல்ல. அதுதான் சுதந்திரத்தின் ஓசையும் வாசனையும்" என்று ஹசன் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close