புதுடெல்லி: இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் இன்று (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சமரச முயற்சியில் ஈடுபட்டத்தை அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
இது தொடர்பாக, சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பினரும் நிறுத்திக்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. இதை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12-ஆம் தேதி 12 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா - பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளன. இரு நாடுகளும் புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடித்துக் கொண்டிருந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்கா நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த 7-ம் தேதி முதல் நடந்து வந்த மோதல் 4 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது.