கொஞ்சம் கடமை... கொஞ்சம் அன்பு! - காவலருடன் நாய் விளையாடும் வீடியோ வைரல்!


சற்று நின்று கவனிக்க நேரம் இல்லாமல் சலசலத்து ஓடும் வாழ்கையில் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை கவனிக்கத் தவறி விடுகிறோம். அப்படியான சின்ன சந்தோஷம் தரும் காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடமை தவறாத போக்குவரத்துக் காவலரும் அவரிடம் கொஞ்சி விளையாடும் தெரு நாய் ஒன்றின் வீடியோதான் அது.

மனதை நெகிழச் செய்யும் இந்தக் கொஞ்சம் கடமை, கொஞ்சம் அன்பு அடங்கிய காட்சியை ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் போக்குவரத்து காவலர் ஒருவர், பரபரப்பான சாலையில் போக்குவரத்தை மிகவும் சிரத்தையுடன் நின்று ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார். அப்போது விளையாடும் மனநிலையில் இருக்கும் நாட்டு நாய் ஒன்று, அவரின் காலுக்கடியில் துள்ளிக் குதித்து, காலை எக்குப் போட்டு விளையாடுகிறது. பல தகிடதத்தோம் செய்து போக்குவரத்துக் காவலரின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறது. கடமையில் கண்ணாக இருந்தாலும் இறுதியில் காவலரால் நாயின் குறும்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

இந்தக் குறும்பான வீடியோவுக்கு, ‘நாலு கால் நண்பரின் தீவிர உதவியை பெறும் போக்குவரத்துக் காவலர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மனதை இலகுவக்கும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் சின்னச் சின்ன மகிழ்ச்சியான விஷயங்களை கொண்டுவதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

மகிழ்ச்சியான ஆற்றலைக் கடத்தும் நாயின் குறும்புத்தனம், அதனிடம் அன்பு காட்டும் போக்குவரத்துக் காவலர் இருவரும் சேர்ந்து இதயத்தை இதமாக்கும் தருணத்தை உருவாக்குகின்றனர் என்றால் அது மிகையில்லை. இந்தக் காட்சியை பார்த்து உங்களை நீங்களும் இலகுவாக்கிக் கொள்ளுங்கள்...!

A post shared by Blue Cross of India (@blue_cross_rescues)