காவல் நிலைய லாக் அப்பில் படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு: வைரலாகும் வீடியோ!


காஜியாபாத்: காவல் நிலையத்தின் லாப் அப்பில் நாகப்பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள மதுபன் பாபுதம் காவல் நிலையத்தில் இன்று காலை துப்புரவு பணியாளர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லாக் அப்பில் இருந்து ஒருவித சத்தம் வந்துள்ளது. என்ன சத்தம் வருகிறது என்று பார்த்த போது, அங்கே நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

இதைப் பார்த்து ஆடிப்போன தூய்மைப் பணியாளர் உடனடியாக காவல் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் உள்ளே வந்து பார்த்த போது நான்கு அடி நீள நாகப்பாம்பு லாக் அப்பில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்தனர். லாக் அப்பில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று கூறிய வனத்துறையினர், அந்த பாம்பை அங்கிருந்து பிடித்துச் சென்றனர். இந்த பாம்பு எப்படி லாக் அப்பிற்குள் வந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், லாக் அப் அறையில் காலி தேநீர் கோப்பைகளுக்கு நடுவில் நாகப்பாம்பு படமெடுத்து நிற்பது பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் காவல்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.