உயரமான கட்டிட கிரில் கம்பிகளுக்கு இடையில் சிக்கிய பூனையை போராடி மீட்ட ப்ளூ கிராஸ் - வைரல் வீடியோ


செல்ல பிராணிகளில் ரொம்பவே வித்தியாசமானவை பூனைகள். சிறுபிள்ளைகளைப் போல தங்களின் எஜமானர்களிடம் செல்லம்கொஞ்சும் பூனைகளின் சேட்டைகளும் சிறு குழந்தைகளுக்கு நிகரானவையே. அந்தச் செல்ல சேட்டைகள் சில நேரங்களில் எக்குத்தப்பாகி விடுவதும் உண்டு. அப்படி வடசென்னையில் 20 மாடி உயர கட்டிடத்தின் ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையில் எக்குத்தப்பாக மாட்டிக்கொண்ட பூனை பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சுமார் 12 மணி நேரங்களுக்கு மேலாக கிரில் கம்பிகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட அந்தப் பூனை மீட்கப்படும் காட்சிகளை சென்னையில் செயல்பட்டுவரும் ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

“உயரமான கட்டிடத்தின் கிரில் கம்பிகளுக்கு இடையில் பூனை மாட்டிக் கொண்டிருப்பதை பார்த்த அந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் ப்ளூ கிராஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு விரைந்து சென்ற ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா உறுப்பினர்கள் அங்குள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்தனர்.

கிரில் பூனை சிக்கியிருந்த இடத்துக்கு கட்டிடத்தின் மாடி வழியாக மட்டுமே செல்ல முடியும். பூனை இருக்கும் இடத்துக்கு நாங்கள் ஒரு கயிறை அனுப்பினோம். அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் அந்த இடத்துக்குச் செல்வது மிகவும் சவாலாக இருந்தது.

எங்கள் குழுவினர் 20 மாடி கட்டடத்தின் கிரில்களில் சிக்கியிருந்த பூனையை பாதுகாப்பாக மீட்டனர். அந்தப் பூனை சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் அங்குச் சிக்கியிருந்தது. ஆனாலும் எங்கள் நிபுணர் குழு கயிறு மூலமாக பூனை இருக்கும் இடத்துக்குச் சென்றனர். சவாலான அந்தப் பணியில் வெற்றி பெற்ற எங்கள் குழுவினர், பூனையை பத்திரமாக மீட்டனர்" என்று தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவில் உயரமான கட்டிடத்தின் கிரில் கம்பிகளின் இடையில் சிக்கியிருப்பது தெரிகிறது. பின்னர் ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவின் வாகனம் அங்கு வருகிறது. அதில் இருந்து இறங்கும் அதன் உறுப்பினர்கள் சூழலை ஆராய்ந்து கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று கயிறு ஒன்றை கீழே அனுப்புகின்றனர்.

பின்னர் குறுகலான இடம் வழியாக இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஒருவர் பூனை சிக்கியிருக்கும் இடத்துக்கு செல்கிறார். பின்னர் மெதுவாக பூனையை கம்பிகளுக்கு இடையில் இருந்து மெதுவாக இழுத்து மீட்டு ஒரு வலை பை மூலமாக மேலே அனுப்புகிறார். பூனை பத்திரமாக மீட்கப்பட்டது.

வீடியோவைப் பார்த்த பின்னர் பல இணையவாசிகள் அந்தப் பூனை இறந்து விட்டதாக கருதினர். இணையவாசிகளின் அந்தக் கவலைக்கு ப்ளூ கிராஸ் பதில் அளித்துள்ளது. அது, "கிரில் கம்பிகளுக்கு இடையில் மாட்டிய பூனை பத்திரமாக மீட்கப்படுவதை உறுதி செய்யவும், மீட்கப்படும் போது பூனை பிராண்டுதல் கடித்தல் போன்ற செயல்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய பூனைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. மீட்பு பணிகள் முழுமையாக முடிந்ததும், பூனை மயக்கத்தில் இருந்து முழுமையாக மீண்டதும் அதன் பழைய இடத்தில் விடப்பட்டது" என்று விளக்கம் அளித்துள்ளது.

இன்னும் பலர் ப்ளூ கிராஸ் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்."இது ஒரு கடினமான மீட்பு பணி. அந்தப் பூனை சிக்கியிருந்த இடத்தையும் அந்த குறுகலான இடத்தினையும் கற்பனை செய்து பாருங்கள். தைரியமாக கீழே சென்று பூனையினை மீட்டவருக்கு மிகவும் நன்றி" என்று ஒருவர் தெரிவித்துள்ளனர்.

நடிகை திரிஷாவும் இந்த வீடியோவில் கருத்திட்டுள்ளார். மற்றொரு பயனர், "இந்த பூமியில் இன்னும் நல்லவர்கள் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையை இந்த வீடியோ எனக்கு அளிக்கிறது. கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பாராக" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1959-ம் ஆண்டு ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா தொடங்கப்படட்து. இது சென்னையை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஒரு விலங்கு நல தொண்டு நிறுவனமாகும்.