‘முட்டாள்தனத்தின் உச்சம்’ - புனே டீன் ஏஜ் பெண்ணின் ரீல்ஸ் சாகசம் வைரல்


இளங்கன்று பயமறியாது என்றொரு சொலவடை உண்டு. இளங்கன்று பயம் மட்டுமில்லை பாதகங்களையும் அறியாது என்று நிரூபிக்கிறது இணையத்தில் வைரலாகி வரும் பதின்ம வயது பெண்ணின் சாகச வீடியோ ஒன்று.

தனது சக வயது நண்பனின் கையைப் பற்றியபடி, அந்தப் பதின்ம வயது பெண் உயரமான கட்டிடத்தின் உச்சியில் இருந்து தொங்கும் வீடியோ இணையவாசிகளிடம் எதிர்மறை விமர்சனத்தை உண்டாக்கியிருப்பதுடன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழச் செய்துள்ளது. மூன்ஸ்ஃபையர் டாட் காம் என்ற எக்ஸ் பக்கத்தில் அந்த சாகச வீடியோ பகிரப்பட்டுள்ளது. அத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் மராத்தி பதிவில், "எல்லாம் இந்த ரீல்ஸ்காகதான். இது முட்டாள்தனத்தின் உச்சம். இவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். இது புனேவில் உள்ள தாரிபூலாக இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், உயரமான கட்டட உச்சி ஒன்றில் பதின்மவயது இளைஞர் ஒருவர் குப்புற படுத்துக்கொண்டிருக்கிறார். அவரது மணிக்கட்டையும் கட்டடத்தின் விளிம்பையும் பிடித்துக்கொண்டு பதின்ம வயது பெண் ஒருவர் அந்தரத்தில் இறங்குகிறார். சற்று நேரத்தில் அந்த இளைஞனின் கைகளை பற்றிய படி ஒற்றைக் கையில், அந்தரத்தில் தொங்குகிறார். தொடர்ந்து வீடியோவில் காட்சிகள் மாற அந்தரத்தில் தொங்கும் அந்த இளம்பெண்ணின் சாகசத்தை பல்வேறு கோணங்களில் காட்டுகிறது. அந்த இளம் பெண்ணின் நண்பர்கள் அவற்றை படம் படித்திருக்கலாம்.

ஜூன் 19-ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பல்வேறு நபர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோ குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பயனர் ஒருவர், புனே போலீஸை ‘டேக்’ செய்து அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். அவர், "புனே போலீஸ் தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள். நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர், "இப்படிபட்ட ரீல்ஸுக்காக பலர் தங்களின் உயிரை இழந்துள்ளனர் என்ற செய்திகள் பல வந்துகொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற செயல்கள் நிறுத்தப்படவிட்டால், சட்டபூர்வ நடவடிக்கைத் தேவை. தங்களைப் பின்தொடர்பவர்களின் மகிழ்ச்சிக்காக குடும்பத்தினரை வாழ்நாள் முழுவதும் துயரத்தில் ஆழ்த்து செயல் இது" என்று கருத்திட்டுள்ளார்.

மூன்றாவது பயனொருவர், "எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். நான்காவது நபர், "இங்கு குறிப்பிட்டப்பட்டுள்ள வீடியோவை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.