நேரலையில் கண்ணாமூச்சி காட்டிய ‘ஈ’யும், செய்தி வாசிப்பாளரின் செய்கையும் - வீடியோ வைரல்


தொலைக்காட்சியில் செய்தி நேரைலையின்போது முகத்தின் முன்பு வந்தாடிய ‘ஈ’யை, செய்தி வாசிப்பாளர் விழுங்குவது போன்ற வீடியோ ஒன்று இணைத்தில் வைரலாகி வருகிறது. பாஸ்டன் 25 நியூஸ் தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளரான வானேசா வெல்ச் தான் அந்தக் கொண்டாட்டத்துக்குரியவர்.

இது குறித்த வீடியோவில், நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறார் வானேசா வெல்ச். அப்போது அவரது இடது கண்ணில் ஈ ஒன்று அமர்ந்திருப்பது போல தெரிகிறது. அதனை லட்சியம் செய்யாமல் அவர் தொடர்ந்து செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அந்த ஈ கீழே நழுவி விழுந்து அவரது வாயில் விழுகிறது.

இந்த திடீர் குறிக்கீட்டால் மைக்ரோ நொடிகளுக்கு நின்ற வானேசா, அந்த ஈ-யை மென்று விழுங்குவது போல தோன்றுகிறது. ஆனாலும், எதுவும் நடக்காதது போல அவர் அமைதியாக தனது செய்தி வாசிப்பைத் தொடர்கிறார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி நிறுவனம், "பாஸ்டன் 25 தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், உண்மையான இதழியல் தொழில்முறை நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர், ஈ ஒன்றை விழுங்கிவிட்டு எதுவும் நடக்காதது போல தனது செய்தி வாசிப்பைத் தொடர்கிறார்" என்று தெரிவித்துள்ளது.

இந்த வீடியோ பிற சமூக வலைதள பக்கங்களிலும் வைரலாகி வானேசாவுக்கு பாராட்டினை பெற்றுத் தருகிறது. இணையவாசிகள் செய்தி வாசிப்பாளரின் அமைதி மற்றும் கட்டுப்பாடான செய்கையைக் கொண்டாடி வருகின்றனர். பயனர் ஒருவர், "அவர் மிகவும் தொழில்முறையானவர்" என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், "இது மிகவும் கிறுக்குத்தனமானது. நான் உங்களை நேசிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இன்னுமொருவர், "வாவ் அன்றி வேறில்லை" என்று தெரிவித்துள்ளார்.