வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.12-க்கு விற்பனையாகிறது.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப் படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் ஒட்டன்சத்திரம் காய் கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதே போல், கர்நாடகா மாநிலத்தில் விளை விக்கப்படும் சின்ன வெங்காயமும் இங்கு கொண்டு வரப்படுகிறது.
நடப்பாண்டில் கர்நாடகாவில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனால் கடந்த ஒரு வாரமாக ஒட்டன்சத்திரம் காய் கறி மார்க்கெட்டுக்கு அதிகளவு வரத் தொடங்கியுள்ளது. இதனால் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிக விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை மூட்டையாக சின்ன வெங்காயம் தேங்கி உள்ளது.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் அதிகளவு சின்ன வெங்காயம் விற்பனைக்கு குவிந்துள்ளது. திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் இல்லாததாலும், உள்ளூரிலும் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எங்களிடம் மொத்தமாக வாங்கி, சில்லறை வியாபாரிகள் வெளி சந்தையில் 5 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்கின்றனர் என்றனர்.